கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு சமூகக் கடமையாகும்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு சமூகக் கடமையாகும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு தனி மனிதனால் மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு காரியமல்ல. அது ஒரு சமூகக் கடமையாகும் என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் (30) முற்பகல் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, அதனை மீறுபவர் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்கள் கூடுதலானோர் இனங்காணப்பட்டதனையடுத்து நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் பிரதேச செயலாளர் தலைமையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது இக்கூட்டத்தில் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி ரி.வினோதினி , நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அமரதாஸ ஆனந்த, மத்திய முகாம் பொலிஸ் பரிசோதகர் பி.ஜி பத்மசிறி ,சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ரவீந்திரன் , கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் , சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் , வேப்பையடி இராணுவ முகாம் அதிகாரி பத்மகுமார , மத நிறுவனங்களின் பரிபால சபையினர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக எல்லைக்குள் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றோடு இணைந்து பொதுமக்கள் கூடும் இடங்களில் கள விஜயங்களை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டும். தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்புக் குழுவிலுள்ள ஒவ்வொரு அதிகாரியும் வாரத்தின் ஒவ்வொரு நாளும் தனிமைப்படுத்தப்பட்ட  வீடுகளுக்குச் சென்று கண்காணிக்க வேண்டும்.

தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது, திருமண மற்றும் மரண வீடுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்த வேண்டும். வெளியூரிலிருந்து வியாபாரத்துக்கு வருவோரின் விபரம் பதியப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படல் வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பொதுவெளிகளில் முகக்கவசம் அணியாமல் வருவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும். இதேவேளை அரசாங்கத்தின் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். தவிர்த்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு தனி மனிதனால் மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு காரியமல்ல. அது ஒரு சமூகக் கடமையாகும். சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு சுகாதார வழிமுறைகளைப் பேணி கொரோனாவை விரட்டியடிக்க முற்படுதல் வேண்டும். ஒவ்வொருவரும் கொரோனாவை ஒழிப்பதில் தனது வகிபாகத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.