பொலிஸ், இராணுவ அராஜகம்: சபையில் பொங்கினார் மனோ.

பொலிஸ், இராணுவ அராஜகம்:
சபையில் பொங்கினார் மனோ.

“இந்துக் கலாசார திணைக்களத்தில் இந்துப் பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியைப் பெற்றுக்கொண்டு, செயற்படும்படி, வடக்கு, கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும், யாழ்., வன்னி பிராந்திய இராணுவக்  கட்டளைத் தளபதிகளுக்கும் கூறுங்கள்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அமைச்சர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ச ஆகியோரிடம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் கூறியதாவது:-

“கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளையும், நவம்பர் 29 பெளர்ணமியன்று நடந்த கார்திகை தீப இந்துப்  பண்டிகையையும் பொலிஸும், இராணுவமும் போட்டுக் குழப்பியடித்துள்ளன.

இராணுவத்தினரும், பொலிஸாரும், கார்த்திகை தீப விளக்கேற்றல்களைத் தடை செய்துள்ளார்கள். இத்தகைய நடைமுறைகள் மூலம் இந்த நாட்டில் பெளத்தர்கள், இந்துக்கள் மத்தியில் ஒருபோதும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.

இங்கே சபையில் வந்து, கார்த்திகை தீப நிகழ்வுகளைப் பாதுகாப்புப் பிரிவினர் குழப்பும் சம்பவங்கள் நடைபெறவில்லை எனச் சொல்ல வேண்டாம். இவை நடந்துள்ளன. இதற்கு எதிராகப் பொலிஸ் புகார்கூட செய்யப்பட்டுள்ளது. இது பற்றி இங்கு வன்னி மாவடிட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் சொல்வது முற்றிலும் உண்மை.

கடைசியாக எமது ஆட்சியில் எனது பொறுப்பிலேயே இந்து சமய துறை இருந்தது. ஆகவே, மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். அவை பற்றி இந்தச் சபையில் பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கின்றது” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.