பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்த உதயன் பத்திரிகை மீது வழக்கு !

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் “உதயன் ” பத்திரிக்கைக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“உதயன்” பத்திரிகை யாழ்ப்பாணத்தில் அதிகம் விற்பனையாகும் செய்தித்தாள் ஆகும். பிரபாகரனின் புகைப்படத்தை நவம்பர் 26 ஆம் திகதி பிரசுரித்தமைக்காக பொலிஸாரினால் குறித்த பத்திரிகை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கை நீதிமன்றம் 2021 மார்ச் 21 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

இலங்கை பொலிஸார் பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக குறித்த பத்திரிகையின் பதிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இ. சரவணன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“அடிபட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலைமையை உருவாக்கினோம்” என யாழ். தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்திருந்ததோடு அந்த செய்தி உதயன் பத்திரிகையில் வெளியானதோடு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் ஆத்திரமடைந்ததால் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்களும் சந்தேகிக்கின்றனர்.

இந்த நாட்டின் பத்திரிகைகள் மற்றும் பிற ஊடகங்கள் பல சந்தர்ப்பங்களில் பிரபாகரனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன, இது தொடர்பாக ஒரு ஊடக நிறுவனம் மீது வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த நாட்டில் ஊடக வரலாற்றில் மிகவும் வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளான பத்திரிகை உதயன் செய்தித்தாள் என்பதுடன், அந்த சம்பவங்கள் தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொண்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இலங்கை காவல்துறை தவறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.