வடக்கு கிழக்கு தனிப்பிராந்திய யோசனையைத் தூக்கி வீசுங்கள்.சரத் வீரசேகர

வடக்கு  கிழக்கு தனிப்பிராந்திய
யோசனையைத் தூக்கி வீசுங்கள்
கூட்டமைப்பின் யோசனைக்கு எதிராக சரத் வீரசேகர போர்க்கொடி

“இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவுடன் தொடர்ந்து செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குச் சமர்ப்பித்துள்ள யோசனைகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனிப்பிராந்தியமாக இருக்க வேண்டும் என்ற யோசனையை அரசு தூக்கிக் குப்பையில் வீச வேண்டும்.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன் கூட்டமைப்பின் யோசனைகளில் எதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசமைப்பில் மத்திய மற்றும் பிராந்தியங்களின் ஐக்கியத்தைக் கொண்டதாக அரசு முறைமை அமைய வேண்டும். அதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு – கிழக்கு இருத்தல் வேண்டும் என்று புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் அவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலும், அவர்களின் கனவை நனவாக்கும் வகையிலுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

மாகாண சபை முறைமை மூலம் தனி இராஜ்ஜியத்தை நடத்தலாம் என்ற எண்ணத்துடனேயே கூட்டமைப்பினர் உள்ளனர். அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயக பூமி என்ற மமதையுடனும், அந்த இரு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற நப்பாசையுடனும் கூட்டமைப்பினர் உள்ளனர்.

இதன்காரணமாகவே மாகாண சபை முறைமைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன். அதுதான் மாகாண சபைத் தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.