கண்மணியே பேசு!     பாகம் : பத்து

பாகம் : பத்து

 

பூ மாலையே தோள் சேர வா… பூ மாலையே தோள் சேர வா…-

ஏங்கும் இரு இளைய மனது  இளைய மனது

இளைய மனது – இணையும் பொழுது

பூ மாலையே தோள் சேர வா..

 

கண்மணிக்கு அப்பாடல் ஏனோ நினைவில் வந்து அவள் மனதில் பல கவலைகளையும் குழப்பங்கங்களையும் ஏற்படுத்தின.  தான் ஏதோ பிழை விட்டது போன்றே அடி மனதில் ஏற்பட்ட உணர்வலைகளை அவள் தள்ளி வைக்கப் பார்த்தாலும் அவள் கணனியில் பார்த்த விடயங்களும் அவள் தோழி ஒருத்தி ஒரு நாள் அல்ல, பல நாட்களாக அவளுக்கு எடுத்துச் சொல்லிய சில விடயங்களும் சேர்ந்து அவள் மனதைப்  பலமாகத் தாக்கியபடியே இருக்க அவள் அப்படியே நாற்காலியில் சரிந்து விழுந்தாள்.

எங்கே தவறு நடந்தது? அவள் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள்.

ஒரு தடவை வாழ்க்கையில் ஏற்பட்ட வலியில் துவண்டு போனவளுக்கு மாமருந்தாக ஒருவன் அமைவான் எனத் தான் நினைத்தது தவறா? இல்லையெனில் அவன் தன்னை நேசித்தது வெறும் மாயையா எனப் பலவாறு எண்ணித் தவித்தவளுக்கு பதில் ஏதும் அவள் மனதில் தோன்றவில்லை.  சகோதரிகளின் அன்பைக்கூட தட்டிக் கழித்து,  தான் எடுத்த முடிவு சரியாகத்தான் இருக்கும் என்ற மமதையில் இருந்து விட்டோமோ என்ற நினைப்பும் அவளுக்கு வராமல் இல்லை.

 

தன்னை நெஞ்செல்லாம் நேசிக்கும் தன் குழந்தைகளுக்கு அவள் என்ன சொல்லப் போகிறாள்? அவர்கள் துடித்துப் போக மாட்டார்களா?

எமது சமூகத்தில் உள்ளவர்களைப் பற்றியெல்லாம் அவளுக்கு சிந்தனை எதுவும் தோன்றவில்லை. அவர்கள் அவளை வாழ்ந்தாலும் திட்டுவார்கள், தாழ்ந்தாலும் திட்டுவார்கள் என்பதை அவள் கடந்த கால அனுபவங்கள் அவளுக்கு  நன்றாகவே பாடம் கற்றுத் தந்திருந்தன.  அவளுடைய கவலையெல்லாம் இனி என்ன செய்வது என்பதில்த் தான் இருந்தது.

 

 

அவன்  வீட்டுக்குத்  திரும்பி வரும் போது எதுவும் தெரியாதது போல நடிப்பதா அல்லது தான் அவன் கணணியில்ப் பார்த்ததைப் பற்றி  என்ன ஏதென்று விசாரிப்பதா? அவனுக்குக்  கோபம் வராமல் கேட்பதற்கு இது ஒன்றும் சிறிய விடயமும் அல்லவே.

 

அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. குரல் வளையெங்கும் ஒரு வித வறட்சி பரவ, அவள் சமையல் அறைக்குப் போய் தண்ணீர் கூட எடுத்து வர முடியாமல் அவள் கால்கள் தள்ளாடின.  தன் இறந்து போன கணவனை மனமார நினைத்துக் கொண்டாள். அவள் கண்களில் அவளையறியாமலே கண்ணீர் பெருகியது, இருந்தாலும் அதே நிமிடத்தில் அவளுக்கொரு தைரியமும் எங்கிருந்தோ வந்து அவளுக்குள் மெதுவாக அமர்ந்து கொண்டது.

அவளுக்கென்று மிகக் கிட்டத்தில் இருக்கும் மிக அருமையான தோழி ஒருத்திக்கு தொலை பேசினால் மனதிற்கு மேலும் சிறிது தைரியமும் உற்சாகமும் வரலாம் என்ற நம்பிக்கையில் கைத்தொலைபேசியை எடுத்தாள்.

“ஹாய் எப்படி இருக்கிறாய்? கொஞ்ச நாளாய்ச்  சத்தம் ஒண்டையும் காணேல்ல எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தனான்.  பாட்டும் பரதமும் எண்டு பிஸியாய்ப் போனியோ? ” எப்போதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லாத சீவன் அவள் தோழி மரியா.

 

” நான் நல்லாயிருக்கிறன், உன்னோட சில நாட்கள் கதைக்க முடியேல்லைத் தான். மன்னிச்சுக் கொள்ளு… ” தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தவளை அவள் தோழி இடை மறித்தாள்.

 

“கண்மணி நானும் நீயும் இப்பிடி மன்னிப்பெல்லாம் கேக்கிற மாதிரியே பழகினனாங்கள்? நான் சும்மா கேட்டனான். அது சரி ஏன் உன்ர குரல் இண்டைக்கு இப்பிடி ஒரு மாதிரியாய்க் கிடக்கு ?”  மரியா கேட்டவுடனேயே கண்மணிக்கு,  அவளுக்குள் அழக்கூடாது என்றிருந்த அவ்வளவு தைரியமும் சுக்கு நூறாய் உடைந்து போனது.

 

“………………….”

 

கண்மணியின் மௌனமும் அதைத் தொடர்ந்து லேசாகக் கேட்ட அவளது விசும்பலும் மரியாவுக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது. அவள் மெதுவாகத் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

 

“ஏதோ உன்ர மனசைப் பாதிக்கிற மாதிரி நடந்திருக்கு, எனக்கு சொல்லத் தானே போறாய். அழாமல்ச் சொல்லு பாப்பம். ஏதோ என்னால முடிஞ்ச உதவியை நான்  உனக்கு செய்யத் தயாராய் இருக்கிறன்.” மரியா கண்மணியைத் தைரியப்படுத்தினாள்.

தோழி மரியாவின் அன்பில் கட்டுண்டு தன் குரலைச் சரிபடுத்திக் கொண்ட கண்மணிக்கு எதில் இருந்து தொடங்குவது எனத் தெரியாமல்த் திகைத்து, பின்னர் தன்னை நிலைகுலைய வைத்த கணனி விவகாரத்திலிலிருந்து தொடங்குவது எனத் தீர்மானித்தாள்.  அத்துடன் எந்நேரமும் அவன் வீடு திரும்பக்கூடும் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.

 

“நான் சொல்லுறது உன்னோட மட்டும் இருக்கும் என்ற நம்பிக்கையில கதைக்கிறன் மரியா.  நான் சேரனோட சேர்ந்து வாழுவது என்ற முடிவுக்கு எவருடைய தலையீடும் இன்றி நானே தான் வந்தனான். இப்ப ஆறு மாதம் முழுசாய் முடிய முன்னரே அவரிண்ட நடை, உடை பாவனை எல்லாம் மாறிப்போச்சு. என்னால முதலில நம்ப முடியேல்ல, ஒருத்தருக்கும் சொல்லி அழவும் முடியேல்ல.” கண்மணி சீரற்ற தன் மூச்சை நன்கு இழுத்து விட்டுக்கொண்டாள்.

 

“உனக்கு என்னைப் பற்றி நல்லாய்த் தெரியும், நம்பிக் கதைக்கலாம்.” கண்மணி சொல்லத் தொடங்கியவற்றை நம்ப முடியாமல், அதே நேரம் தான் கதைத்தால் எங்கே அவள் கதைப்பதை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்தில் அதிகம் கதைக்காமல் அமைதியாகினாள் மரியா.

 

“முதலில  நான் சொல்லுறதைக் காது குடுத்து கேக்கிறதை நிப்பாட்டினார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை எண்டிட்டு நான் பொறுமையாய் இருந்து பார்த்தன். கதைக்க முயற்சி பண்ணினனான், சரி வரேல்ல. வீட்டில கதைக்கிறதென்னவோ குறைவு எண்டாலும் அவருக்கு சாமத்திலயும் மொபைல் ஃபோனில இருந்து யாரோ கதைச்சுக் கொண்டுதான் இருப்பினம். யார் எண்டு ஒரு நாள் கேட்டதுக்கு…” அவள் விம்மினாள்.

 

சிறிது இடைவெளியின் பின் கண்மணி தொடர்ந்தாள்.

 

“எனக்கு கை நீட்டிப்போட்டார். கழுத்துப் பக்கம் எல்லாம் வீங்கிப் போச்சு. அடிச்ச அடையாளமும் மாறாமல் இருந்தது. ”

 

அதிர்ந்து போன மரியாவுக்கு கேள்விகள் கேட்பதற்கு நாவும் எழும்பவில்லைப் போலும். தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் நிசப்தம்.

சிறிது வினாடிகளில் அந்த நிசப்தத்தை உடைத்தவாறே மரியா கண்மணியை மீண்டும் பேச வைத்தாள்.

“நீ இதை யாருக்காவது சொன்னனீயா? எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு ஈனத்தை செய்திருப்பான்? உன்ர டொக்டரோட கதைச்சனியா?” மரியா படபடத்தாள்.

 

 

“ஓம், டொக்டருக்கு இதையெல்லாம் காட்டினனான், ஆனால் இதைப் பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எண்டும் சொல்லிப்போட்டன். ” கண்மணி கரகரத்த தன் குரலைச் சரியாக்கியபடி பதில் அளித்தாள்.

 

“கண்மணி நீ அதை டொக்டருக்கு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவருக்கு இது சம்பந்தமாக உன்னை உன் ஆரோக்கியம், பாதுகாப்பு ரீதியாகக் (Safe Guarding Regulation)  காப்பாற்றுவதற்கு  ஒரு தொழில் ரீதியான பொறுப்பும் கடமையும் உண்டு.  அதை அவர் செய்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு!” மரியா மெதுவாக ஆனால் ஆணித்தரமாக தன் கருத்தை முன் வைத்தாள்.

 

கண்மணி அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் மௌனித்திருந்தமைக்கான காரணம் மரியாவுக்கு அந்த வினாடி தெரியாவிட்டாலும் அவளது அடுத்த வசனம் அவளை நிலைகுலைய வைத்தது.

 

 

“மரியா அதையெல்லாம் விட என்னை அதிர்ச்சியில உறைய வைச்ச விசயம் ஒண்டு இருக்கு. பயந்து போவியோ தெரியேல்ல, தயவு செய்து எனக்கு இதை நீ கேட்டாலே பெரிய உதவியாய் இருக்கும்.”

 

“எனக்கு நீ இப்ப சொன்னதையே நம்ப முடியாமல் இருக்கு, எப்பிடி உன்னை இவ்வளவு பாசமாய்க் காதலித்தவன் இப்பிடி கெதியாய் மாறிப் போனான்?  இதைவிட இன்னும் என்ன அதிர்ச்சி வேணும் எனக்கு எண்டு விளங்கேல்ல.”

மரியா குழம்பியிருப்பது தெரிந்தது.

 

” இண்டைக்கு நான் சேரன்ர கொம்ப்யூட்டர்ல தற்செயலாய் என்ரை படங்களை பார்த்தனான் மரியா!”

 

“அதில என்ன ஆச்சரியம் எண்டு கேக்கிறன், எல்லாரும் செய்யிறது வழமை தானே?” மரியா புரியாமல் குழம்பினாள்.

 

 

” வெறும் சாதாரணமான படங்கள் எண்டால் நான் ஏன் ஏங்கிறன்?   அதில நான் இருந்தன், முழு நிர்வாணமாக…” தேம்பி அழத் தொடங்கியவளை என்ன செய்வதெனத் தெரியாமலும் தன காதுகளை நம்ப முடியாமலும் மரியா திகைத்துப் போனாள்.

 

” அதுவும் வெறும் படம் இல்லை மரியா,  விடீயோவில நான் அந்தரங்கமாக அவனுடன் இருந்த போது எடுத்திருக்க வேணும்.  எனக்கே தெரியாமல்…” கண்மணி தொடர்ந்தாள் உடைந்த குரலுடன்.

“கண்மணி அழாதை, அழுது இப்ப பிரயோசனமில்லை.  வடிவாய்ப் பார்த்தனியோ அது நீதான் எண்டு? உனக்குத் தெரியாமல் எப்பிடி வீடியோ எடுக்கேலும்? சேரனை இதுபற்றிக் கேக்கேல்லையோ?”

 

“நானே இப்ப கொஞ்சம் முதல்த் தான் இந்தக் கண்ராவியைப் பார்த்தனான்.  அது நான் தான் சந்தேகமேயில்லை. அது மாத்திரமில்லை, இது மாதிரி வேற சில பொம்பிளைகளின்ர வீடியோக்களும் இருந்தது. அதில சிலரை எனக்குத் தெரியும். சிலரைத் தெரியேல்ல.”  மூச்சிறைக்க சொல்லி முடித்தாள் கண்மணி.

 

“கண்மணி நான் சொல்லுறதை வடிவாய்க் கேளு.  நீயும் நிறைய அதிர்ச்சியில இருக்கிறாய். இண்டைக்கு ஒண்டும் தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்கொள்ளாத,  முடிஞ்சால் நாளைக்கு பின்னேரம் ஆறு மணிக்குப் பிறகு எங்கட வீட்டில வந்து சந்திச்சுக் கொள்.  எல்லாம் நான் பார்த்துக் கொள்ளிறன்.  ஏனெண்டால் நான் இப்ப உன்ர பாதுகாப்புக்குத் தான் பயப்பிடுறன்.  உங்கள் இரண்டு பேரைத் தவிர உங்கட ஃப்ளட்டில ஒருத்தரும் இல்லை.  உனக்கேதும் நடந்தால் ஒருத்தருக்கும் ஒண்டும் தெரிய வராது.”  மரியா பலவிதமான எண்ணங்களோடு பேசி முடிக்கவும் ஒன்றும் சொல்லாமலே கண்மணியின் கைத் தொலைபேசி தொடர்பை நிறுத்திக்கொண்டது.

 

நல்லவேளை சொல்ல வேண்டியதையும் கேட்க வேண்டியதையும் செய்தாச்சு. சேரன் வீட்டுக்கு வந்ததால்த் தான் கண்மணி தொலைபேசியை த்  துண்டித்திருக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் கண்மணியின் பாதுகாப்பு, மனவளம் பற்றிய உதறல் ஒன்று மரியாவுக்குள் தொடங்கியிருந்தது.

கண்மணி மரியாவைச் சந்திப்பாளா?

Leave A Reply

Your email address will not be published.