Sir திரை பார்வை : ஜோ

Is Love Enough Sir!

ஆவணப்பட இயக்குனர் ரோகனா கெராவின் இயக்கம் எழுத்தில் உருவான, நவம்பர் 2020ல் வெளியான ஹிந்தி திரைப்படம் இது. திரைக்கதை, கதாப்பாத்திரப் படைப்பு, கதைக் கரு மிகவும் தெளிவாக சமூக மேம்பாட்டுக்கு உதவும் விதத்தில் அமைத்துள்ளனர்.

ரத்னா, ஒரு கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த இளம் பெண். பட்டணத்தில் பணக்காரர் வீட்டில் வீட்டு வேலைக்காரியாக வேலை செய்து கொண்டிருப்பார்.

கணவரை இழந்த ஒரு பெண் தனக்கு பிடித்தமான வளையல்கள் கூட அணிய இயலாத இறுக்கமான சூழலிலுள்ள கிராமத்தில் இருந்து பட்டணத்தை நோக்கி வர பைக்குள் வைத்திருந்த வளையல்களை எடுத்து அணிகிறார். ஒரு ஊரின் கட்டுப்பாடு ரத்னா என்பவரின் ஆளுமையை சுயத்தை பாதிக்கவில்லை என்பதை இந்த ஒரு காட்சி அமைப்பில் இருந்தே புரிந்து கொள்ளலாம். தன்னை நகரத்திற்கு அனுப்பியது கூட ஒரு ஆள் சாப்பாடுச் செலவை மிச்சப்படுத்தலாம் என்ற கணவர் வீட்டுக்காரர்கள் மன நிலை என அறிந்தும், அந்த இகழ்ச்சியான சூழலையும் தனது சுயசார்பான மேம்பட்ட வளர்ச்சிக்காக மாற்றி கொள்கிறார் ரத்னா. கணவர் வீட்டுக்கும் நாலாயிரம் ரூபாய் அனுப்புகிறார், தன் சொந்த தங்கையை படிப்பிக்கிறார். தன் தங்கை தன் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும், வரும் காலம் தானும் தங்கையும் சேர்ந்து ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் நடத்த வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். தன் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கிடைக்கும் நேரத்தில் தையற்கலையை கற்கவும், தன் லட்சியமான ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றவும் உழைக்கிறார்.

ஒரு ஏழைப் பெண், சமூகபுரக்கணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட பெண், பல இல்லாய்மைகள் மத்தியிலும் தன்னுடைய புத்தி கூர்மையையும் உழைப்பையும், நேர்மையும் நம்பி அவளுடைய இலக்கை எப்படி அடைந்தாள் என்பதே இத் திரைப்படம். தடைகள் சூழ்ந்து இருந்தாலும் தைரியமாக, பொறுமையாக எதிர்கொண்டு இலக்கை அடையும் ஒரு சாதாரணப் பெண்ணின் வெற்றிக்கதை இந்த திரைப்படம். பெண் உரிமை என்ற கூக்குரல் இல்லாதே ஒரு பெண் எவ்வாறு தான் நினைத்த இடத்தை அடைந்தார் என்று கூறும் கதை. வாழ்க்கையின் அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் பெண்களுக்கும் நம்பிக்கையூட்டும் திரைப்படம் இது.

ரத்னா தன் நிலையை சேர்ந்த மனிதர்களுடன் கொண்டாட்டத்திலும் இயல்பான மகிழ்ச்சியிலும் வாழும் அழகு. பேராசையற்ற வாழ்க்கை, நினைத்ததை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் அதற்காக அவல் கைகொள்ளும் நேர்மையான முயற்சிகள் எதிர் கொள்ளும் அவமானங்கள் இப்படியாக செல்கிறது கதை.

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளியிடன் கண்ணியமாக நடந்து கொள்ளும் விதம் , ஒரு கட்டத்தில் முதலாளி தன் திருமணம் தடைப்பட்டு போனதை எண்ணி உடைந்து இருக்கும் போது நம்பிக்கை பகிர்ந்த ஓரிரு வார்த்தைகள், முதலாளி இரக்கம் பரிவான மனிதராக இருந்தும் அவரிடம் தனக்கு எவ்வளவோ தேவை வந்தும் பணம் வாங்கக்கூடாது என்ற நற்பண்பு, முதலாளிக்கு பிறந்த நாள் வருகையில் தானே வடிவமைத்த சட்டயை பரிசாக தருவது, முதலாளியும் தன் வேலையாள் பெண்ணின் முயற்சியை பாராட்டி தையல் இயந்திரம் பரிசாக கொடுத்தது. இப்படி இவர்கள் நட்பும் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பெரிய பங்ளாவில் தன் காதலின் பிரிவு சோகத்துடன் இருக்கும் அஷ்வின் என்ற முதலாளி, அதே வீட்டில் தன் சிறிய அறையில் தனக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கும் ரத்தினா.

அவள் வேலை பார்க்கும் வீட்டு முதலாளி இவளின் நல்ல குணத்தில் கவரப்பட்டு இவளை திருமணம் செய்ய ஒரு கட்டத்தில் விரும்புகிறார். அந்த நபரை திருமணம் செய்து ஒரே நாளில் அவள் விரும்பினதை எல்லாம் பெற்றிருக்கலாம். தனது முதலாளியின் மதிப்பான சமூக வாழ்க்கையை எண்ணி பார்க்கிறாள், தன்னுடைய முதலாளியின் பெற்றோரை நினைத்து பார்க்கிறார், தன் கணவர் குடும்பத்தாரை, சமூகக் கட்டுப்பாட்டை நினைத்து பார்க்கிறார்.

தனக்கு அருகதை இல்லாததை வலுக்கட்டாயமாக எவ்வழியிலும் அடைய விரும்பவில்லை. தன்னை நேசிப்பவர்கள் மதிப்பு இழக்கக் கூடாது என எண்ணுகிறாள். அதே மாதிரி அவள் வீட்டை விட்டு போவதை விரும்பினதும் தான் நேசித்தவள் மறுபடியும் கிராமத்திற்கு போய் கஷ்டப்படக் கூடாது என நினைக்கிறார் பணக்காரர் அஷ்வின்.

வீட்டுக்கு வந்த நண்பன், நண்பனின் மனநிலையை புரிந்து கொண்டு தன் நண்பனின் தவறை உணர்த்துகிறார். வீட்டு வேலைக்காரியை உன் தேவைக்காக பயண்படுத்தாதே என அறிவுரைக்கிறான். தன் தந்தையை சந்தித்து “அப்பா நான் திரும்பவும் அமெரிக்கா போக விரும்புகிறேன்” என்றதும். அப்பா காதிலும் கதை எட்டினதோ என்னவோ? “வேலைக்காரியுடன் படுத்தாயா என கேட்கிறார்?

மகன்: ‘இல்லை, அவளில் காதல் கொண்டேன்” என்கிறான்.

அப்போ அமெரிக்கா போவதே நல்லது என்று அனுப்புகிறார் தந்தை..

அப்படியாக யாரும் யாருடைய தனிநபர் வாழ்க்கைக்குள் அத்து மீறி நுழையாத , பணக்காரர்களும் ஏழை நிலையிலுள்ள மனிதர்களும் தங்கள் நிலையை காரணம் காட்டி எதிரே இருப்பவர்களை சூழ்ச்சி செய்து தங்கள் தேவைக்காக பயன்படுத்தக்கூடாது என்று உரைத்த நல்ல திரைப்படம் இது. தங்களின் தயவில் வாழும் மனிதர்களை காதல், அன்பு என்ற பெயரில் கூட அவர்கள் வாழ்க்கைக்குள் விளையாடக்கூடாது என்று அறிவுரைத்த திரைப்படம்.

வேலைக்காரியின் கதாப்பாத்திரம் அமைத்திருக்கும் விதம் சிறப்பு. பெண்ணியம் என்பது தன் காலில் தற்சார்பாக தலை நிமிர்ந்து வாழ்வது, தன்னுடைய வாழ்க்கை சுகங்களுக்காக எந்த வழியும் தேர்ந்தெடுக்காது இன்ன வழியே வேண்டும் என்று தனிமனித விழிமியங்களுக்கு முக்கியம் கொடுத்த திரைப்படம். ஏழ்மை என்றிருந்தாலும் அடுத்தவர்கள் விருப்பத்திற்காக தன் கொள்கையை விட்டுக்கொடுத்து, தன்னை இழப்பது, அடுத்தவர்கள் விருப்பங்களுக்கு உடன்படுவது அல்ல என்று கூறிய அருமையான கதைக்களம். வேலைக்காரியாக நடித்திருக்கும் திலோத்தமாவின் Tillotama Shome நடிப்பு சிறப்பு.

திலோத்தமா தனக்கு ஆடை வடிவமைப்பாளராக வேலை கிடைத்ததை தெரிவிக்க அஷ்வின் வீட்டுக்கு வந்து சேர்கிறார். பூட்டிக்கிடந்த வீட்டை பார்த்து வருத்தம் கொண்டு நிற்கையில் அமெரிகாவில் இருந்து திலோத்தாமாவின் நலனறிய விரும்பி கைபேசியில் அழைக்கிறார் அஷ்வின். ’ சார்’ என்று எப்போதும் பதில் கொடுப்பவள் ’ அஷ்வின்’ என்று பதிலுரைத்து தன்னுடைய அடையாளம் சார்ந்த காழ்புணர்வில் இருந்தும் மீண்டு முழுமையான ஆளுமை கொண்ட பெண்ணாக பரிணமித்த காட்சியுடன் திரைப்படம் முடிகிறது.

போதிய வேகத்தில், மிகவும் சுவாரசியமாக நல்ல திரைக்கதை காட்சி அமைப்புகளுடன் இயல்பாக செல்கிறது.

பெண்ணியத்தை அதன் வலிமையான பாதையில் கொண்டு சென்ற Lunch Box, Queen, Once Again வரிசையில் இத்திரைப்படமும் சேர்ந்து கொள்ளலாம்.

திரைப்படங்கள் என்பது மனிதனின் நுண்உணர்வை தூண்டிவிட்டு வெறும் கற்பனைக் கதையில் நகத்தாமல், இயல்பாக பெண்களின் வலிமையை எடுத்துரைத்த திரைப்படம்.

விவேக் கோம்பே (Vivek Gombe)ல் அஷ்வினாக மிளிர்கிறார். இசை ராகவ் வகவ் Ragav Vagav பாடல் வரிகள், மொஹித் சைஹான் Mohit Chauhan.

புரட்சி என்பது சமூகக்கட்டுபாட்டுகளை உடைப்பது அல்ல , வரி வரியாக வசனம் பேசுவது அல்ல காதல் கல்யாணம் என்று மேலும் சிக்கலுகளுக்குள் விழாது தங்களை மேம்படுத்தி அடுத்தவர்கள் நல்னையும் பேணுவதே என்ற சிறந்த கருத்துடன் முடிக்கப்பட்டுள்ளது.
ரஜனி படங்கள் பார்த்து பழகின நமக்கு இந்த நெறிகள் சினிமா மொழியில் புதிதாக இருந்தாலும் இதுவே நிஜம்.

ஆண்கள் பெண்களின் அழகிலும் பொலிவிலும் மட்டும் கவர்ப்படுகிறவர்கள் இல்லை, பெண்களின் ஆளுமையான குணத்திலும் அறிவிலும் ஆட்படுகின்றனர் என்பதையும் சொல்லிய திரைப்படம்.

– ஜோ

Leave A Reply

Your email address will not be published.