முறித்தெறியப்பட்ட பேனா முனைகள் : சுவிசிலிருந்து சண் தவராஜா

ஊடகர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. பேருந்து நிலையமொன்றில் காத்து நின்ற வேளை காலை ஆறு மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டார்.

உந்துருளி ஒன்றில் வந்த இரண்டு கொலையாளிகள் எந்தவித பதட்டமும் இன்றி அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இன்றுவரை அவர்கள் அடையாளம் காணப்படவும் இல்லை. நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவும் இல்லை. சுகிர்தராஜன் கொலையில் மாத்திரமன்றி இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட எந்தவொரு ஊடகரின் கொலையிலும் கொலையாளிகள் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை. ஒருசில சம்பவங்களில் கைதாகியவர்கள் கூட முறையான விசாரணைகள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டு இருப்பதே வரலாறாக உள்ளது.

யதார்த்தத்தில், இத்தகைய கொலைகளைப் புரிந்தவர்களைக் கண்டு பிடிக்கக் கூடிய ஆற்றலற்றதாக இலங்கையின் புலனாய்வுத் துறை உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. சிறந்த புலனாய்வுப் பிரிவைக் கொண்டதெனக் கருதப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தையே தோற்கடித்தவர்கள் நாங்கள் எனப் பெருமை கொள்ளும் சிறிலங்காப் படைத் துறை இத்தகைய கொலைகள் பற்றிய விசாரணைகள் என்று வரும்போது மாத்திரம் இயலாமையை(?) வெளிக் காட்டுவதென்பது குறித்து நிற்பதென்ன? அரசாங்க உயர் மட்டத்தின் மறைமுகக் கரமொன்று இத்தகைய கொலைகளின் பின்னால் மறைந்திருக்கின்றது என்ற நியாயமான சந்தேகம் ஊடக அமைப்புக்களாலும், மனித உரிமைகள் நிறுவனங்களாலும் தொடர்ச்சியான எழுப்பப்பட்டு வருவதில் உண்மை இருக்குமா?

மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்ற கட்சிகள் யாவும், தேர்தல் சமயங்களில் ஊடகர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவதையும், முன்னைய ஆட்சிக் காலத்தில் ஊடகர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதிகளையும் வழங்கவே செய்கின்றன. ஊடக அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும் இத்தகைய வாக்குறுதிகளை நம்பிக்கொண்டு(?) தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் வெற்றிகளுக்காக உழைக்கின்றனர். பதவியில் அமர்ந்ததும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் எவ்வாறு மறந்து போகிறார்களோ அதே போன்றே ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் தாம் பெற்ற வாக்குறுதிகளையும் மறந்து போகின்றார்கள். அத்தகைய போக்கு ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாகவும் அமைந்து விடுகின்றது.

சுகிர்தராஜன் யார்?

யாழ்ப்பாணத்தில் இருந்து பல வருடங்களாக வெளிவரும் உதயன் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையாக கொழும்பில் இருந்து வெளிவந்த பத்திரிகையே சுடரொளி. அந்தப் பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட நிருபராகப் பணியாற்றியவரே சுகிர்தராஜன். எஸ்.எஸ்.ஆர். என்ற புனைபெயரில் எழுதி வந்த இவர் அன்றைய காலத்தில் வடக்குக் கிழக்கில் செயற்பட்டு வந்த பல ஊடகர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் துணிச்சலோடு ஈடுபட்டு வந்தார். ஏதாவது சம்பவம் நடைபெற்றுவிட்டால் அந்த இடத்திற்கே சென்று செய்திகளை நேரடியாகச் சேகரிக்கும் பண்பை அவர் கொண்டிருந்தார். அத்தகைய பண்பே அவரது உயிருக்கும் உலையாக முடிந்தது.

2006 ஆம் ஆண்டு யனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் வைத்து 5 பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைக் கொலை செய்ததாக ஆயுதப் படையினர் மீதே குற்றஞ் சாட்டப்பட்டாலும் அந்தத் தகவல் படைத் தரப்பினரால் மறுக்கப்பட்டிருந்தது. படையினர் மீது தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளின் கையில் இருந்த கைக் குண்டு வெடித்ததனாலேயே ஐவரும் கொல்லப் பட்டார்கள் என்பது படையினரின் நிலைப்பாடு.

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் மிகுந்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் உடலங்களின் நிழற் படங்களை எப்படியோ எடுத்துக் கொண்ட சுகிர்தராஜன் அவற்றை 4 ஆம் திகதி சுடரொளி பத்திரிகையில் இடம்பெறச் செய்தார். உடலங்களில் இருந்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், குறித்த இளைஞர்கள் கைக் குண்டு வெடித்ததனால் இறக்கவில்லை. மாறாக, யாரோ அவர்களை அருகில் இருந்து நெற்றிப் பொட்டில் சுட்டதினாலேயே இறந்தார்கள் என்ற செய்தியை சந்தேகங்களுக்கு இடமின்றி மெய்ப்பித்தது.

கொல்லப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களின் மரண ஊர்வலங்களில் பெருந்தொகையான மக்கள் – இளைஞர்கள் உட்பட – உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள். மனித உரிமைகள் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. எதிர்க் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூட இத்தகைய கண்டனங்களில் தம்மை இணைத்துக் கொண்டனர். இன்று வரையும் ஐ.நா. மனித உரிமைச் சபையில் ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தப் படுகொலை உள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவை குறித்த நிழற் படங்களே.

குறித்த செய்தி வெளியாகி 20 நாட்களின் பின்னர், யனவரி 24 காலையில் சுகிர்தராஜன் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

வடக்கு கிழக்கில் அன்றைய காலத்தில் பணியாற்றிய பெரும்பாலான ஊடகர்களைப் போன்றே சுகிர்தராஜனும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். யனவரி 2 ஆம் திகதிய சம்பவத்தின் பின்னர் அவரது உயிர் மீதான அச்சுறுத்தல் மேலும் பல மடங்கு அதிகரித்திருந்தது. இதன் காரணமாக தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதற்கான முனைப்பில் அவர் இருந்தார். தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் நினைத்து அவர் வெகுவாகக் கவலை கொண்டிருந்ததாக அவரது நண்பர்கள் பின்னாளில் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

கொலை நடைபெற்றபோது அவர் நின்றிருந்த பேருந்து தரிப்பிடம் அவரது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. அது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வெறும் 100 மீற்றர் தொலைவே. பாதுகாப்புத் தரப்பினர் நிறைந்துள்ள ஒரு இடத்தில் கொலையாளிகள் இலகுவாகத் தப்பிக்கக் கூடிய ஒரு சூழல் நிலவியிருக்கின்றது. இதுவும் பலத்த சந்தேகங்களை எழுப்பி நிற்கின்றது.

பிரகீத் எக்னலிகொட

சுகிர்தராஜன் கொலையுண்ட அதே நாளில் ஆனால் பிறிதொரு ஆண்டில் கொழும்பில் மற்றொரு ஊடகவியலாளர் காணாமற் போனார். யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் 2010 ஆம் ஆண்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. படையினரால் கைது செய்யப்பட்ட பிரகீத் எக்னலிகொட தொடர்பான விசாரணைகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களோ இல்லையோ, அவரது கடத்தலும் காணாமற் போகச் செய்யப்பட்ட விடயங்களும் இன்றும் உலக அரங்கில் பேசப் படுகின்றது என்றால் அதற்கான வலுவான காரணங்களுள் ஒன்று அவரது மனைவியான சந்தியா. இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தியா தனது கணவர் கடத்தப்பட்ட நாள் முதலாக அவரைக் கண்டு பிடிப்பதற்காகப் போராடி வருகின்றார். பல்வேறு முட்டுக்கட்டைகள், அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அவர் தனது போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. ஆட்சியாளர்களின் விருப்புக்கு மாறாக உள்ள போதிலும் அவருடைய ஓர்மம் பாராட்டத்தக்க அளவில் வெளிப்பட்டு நிற்கின்றது. தற்போதைய நிலையில், தனது மகன்மார் இருவரையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் தன்னந்தனியாக நின்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

துர்வாய்ப்பாக, தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் அவர்களின் இணையரோ அன்றி உறவினர்களோ சந்தியா எக்னலிகொட போன்று வெளியே வந்து போராட முடியவில்லை. அவர்கள் தமிழர்களாக இருப்பதுவும், போராடும் தமிழர்களை இலகுவில் புலிகளாக முத்திரை குத்திவிடும் போக்கும், சமூகத்தின் ஆதரவு அற்ற நிலையும் போராடும் எண்ணத்தையே முளையில் கிள்ளி எறிந்து விடுகின்றன.

பிளவு பட்டுள்ள ஊடக அமைப்புகள்

கொல்லப்பட்ட ஊடகர்களை ஒருசில ஊடகவியலாளர் அமைப்புகள் மாத்திரம் நினைவில் வைத்து ஆண்டு தோறும் அவர்களது நினைவு நாளில் சிறிய அளவிலான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றன. அத்தகைய வேளைகளில் கொலைகளுக்கான நீதி கோரும் கோசங்கள் சம்பிரதாயமாக முன்வைக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

அத்தகைய ஊடகர் அமைப்புகள் கூட சில வேளைகளில் இத்தகைய நிகழ்வுகளை ஒன்று சேர்ந்து நடாத்த முடியாமல் தமக்குள்ளே பிளவுண்டு கிடக்கின்றன. சமூகம் சார்ந்த விடயங்களில் ஒற்றுமையை வலியுறுத்தி உபதேசம் செய்யும் ஊடக அமைப்புகள் தமக்குள்ளே ஒற்றுமை இன்றிச் செயற்படுவது எத்தகைய முரண்நகை? இவர்களை ஒற்றுமைப் படுத்துவது யார்? சுகிர்தராஜன் நினைவு நாளிலாவது தமக்குள்ள பேதங்களை மறந்து அல்லது அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு ஊடகர்களின்; நினைவு நிகழ்வுகளை ஒற்றுமையாக நடாத்த அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதுவே, மறைந்த தமது முன்னோடிகளுக்கு அவர்கள் செலுத்தும் இதய பூர்வமான அஞ்சலியாக அமையும் என்பது எனது கருத்து.

பிராந்திய ஊடக அமைப்புகளின் கையாலாகாத நிலைமையே யுத்த காலத்தில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாகக் காரணமானது. தாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை பிராந்திய அடிப்படையில் தீர்த்துக் கொள்ள முடியாமற் போனதாலும், பிரிந்து செயற்படும் போது தமது பலம் குறைகின்றது என்ற சிந்தனையின் விளைவாலுமே பிராந்திய ஊடகர்கள் யாவரும் இலங்கைத் தமிழ் ஊடகவிலாளர் ஒன்றியத்தின் கரங்களைப் பலப்படுத்த முன்வந்தார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பிராந்தியத்திலேயே ஏட்டிக்குப் போட்டியாக ஊடக அமைப்புக்கள் தோன்றுவதும் பிரிந்து செயற்படுவதும் ஆரோக்கியமான விடயங்களல்ல. மந்தையை விட்டுத் தனியாகப் பிரிந்து செல்லும் ஆடுகளே இலகுவாக வேட்டையாடப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் நல்லது.

ஊடகர்களுக்கு ஆபத்து நிறைந்த நாடாக இலங்கை

ஆயுத மோதல்கள் வெடித்த காலம் முதலாக இலங்கை ஊடகவிலாளர்களுக்கு ஆபத்து நிறைந்த ஒரு நாடாகவே இருந்து வருகின்றது. அரச தரப்பு மாத்திரமன்றி, போராட்ட இயக்கங்கள் கூட ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளன. இன்றைய நிலையில் உலகளாவிய ஊடக சுதந்திர அட்டவணையில் இலங்கை 127 ஆவது இடத்தில் உள்ளது. பன்மைத் தன்மை, ஊடகங்களின் சுதந்திரம், நீதித் துறையின் தரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லைகளற்ற ஊடக அமைப்பு இந்த அட்டவணையை வெளியிட்டு வருகின்றது. 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அட்டவணை உலக மன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டில் 126 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2020 இல் மேலும் பின்னுக்குச் சென்றுள்ளதை அவதானிக்கலாம்.

சமூகப் பொறுப்பு

ஊடகவியலாளர்களின் கொலைகள் எதனால் நிகழ்ந்தன? ஊடகர்கள் குறிப்பிட்ட சில விடயங்களை அம்பலப்படுத்தியதால், அதனால் பாதிக்கப்பட்ட தரப்புகள் ஆத்திரம் கொண்டு அவர்களைக் கொலை செய்தன. இத்தகைய கொலைகள் ஊடாக விமர்சனங்கள், எதிர்ப்புக் குரல்கள் எழுவதைக் கட்டுப்படுத்தலாம் என்பது கொலையாளிகளின், அவர்களைக் கொலைக்குத் தூண்டுபவர்களின்; எதிர்பார்ப்பு. கொல்லப்பட்ட எந்தவொரு ஊடகவியலாளரும் தனது சொந்த நலனுக்காகக் குரல் எழுப்பியவர் அல்லர். சமூகத்தின் நன்மைக்காக, அறத்திற்கு எதிரான சம்பவங்கள் நிகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக, அநீதியின் பக்கம் துணைநிற்க விரும்பாததனால், தனக்குச் சரியெனப் பட்ட கொள்கையைச் சமரசம் செய்ய விரும்பாதமையால் அவர்கள் குரலை உயர்த்தினார்கள், அதன் விளைவாக அவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். மக்களை அளவுக்கு அதிகமாக நேசித்தமையால் அவர்கள் கொலையுண்டார்கள்.

அத்தகைய மாண்புறு மனிதர்களை சமூகம் கொண்டாட வேண்டாமா? கொலையுண்ட ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டாமா? இத்தனை கொலைகளுக்குப் பின்னரும் மக்களின் நேசர்களாகக் களத்தில் நிற்கும் ஊடகர்களுக்கு நேசக் கரம் நீண்ட வேண்டாமா? ஆகக் குறைந்தது கொலையுண்ட ஊடகர்களின் குடும்பங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டாமா? சிந்திப்பார்களா மக்கள்?

Leave A Reply

Your email address will not be published.