வாழ்நாளை அதிகரிக்கும் வாசிப்பு!

‘புத்தகம் என்பது கைக்கு அடக்கமான, தனித்துவமான மாயாஜால வித்தை!’ – அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங்

இந்த மாயாஜால வித்தை, கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதாவது, இது வெறும் வித்தை மட்டுமல்ல. உடன் பல்வேறு பரிசுகளையும் தரும் அட்சய பாத்திரம். அப்படி என்ன பரிசுகள் கிடைக்கும்… ஒரு சிறந்த புத்தகத்தால் ஒருவருக்குள் இருக்கும் தனிமை உணர்வை விலக்க முடியும்; நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்த முடியும்; குழப்பங்களுக்கு விடை சொல்ல முடியும்; மனதுக்கு ஆறுதல் தர முடியும். அறிவியல்ரீதியாக இவை எப்படிச் சாத்தியம் என்பதையும், வாசிப்பால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறார் நரம்பியல் மருத்துவர் பிரபாஷ்.

அறிவியல் காரணங்கள்

புத்தகம் வாசிக்கும்போது, மூளையின் பின்பகுதி நரம்புகள் தூண்டப்படும். இந்தப் பகுதியில்தான் நினைவுகளின் தொகுப்புகள் இருக்கும். வாசிப்பு அதிகரிக்கும்போது, நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் மூளையின் பின்பகுதி முன்பைவிட அதிகமாகத் தூண்டப்படும். இதனால் கூடுதல் சுறுசுறுப்பாக இயங்க முடியும். ஞாபகசக்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். கவனம் கூர்மையாகும். நரம்பு மண்டலங்கள் வலுப்பெறும்.

உடலுக்கும் தசைகளுக்கும் தனித்தனியாக உடற்பயிற்சிகள் தேவைப்படுவதைப்போல மூளைக்கும் உடற்பயிற்சி தேவை. வாசிப்புப் பழக்கம் மூளைக்கான பயிற்சியாக அமையும்.

வாசிப்பால் கிடைக்கும் சில நன்மைகள்

ஒவ்வொரு விஷயத்தின் மீதும் எல்லோருக்கும் தனிப்பட்ட ஒரு பார்வை இருக்கும். புத்தகம் வாசிக்கும்போது அந்தப் பார்வை விசாலமடையும். இதனால் அனைத்துக் கோணங்களிலுமிருந்து சிந்தித்து பின்விளைவுகள், பக்கவிளைவுகள் போன்றவற்றை யோசித்துச் செயல்பட முடியும். குறுகிய எண்ணங்கள் மற்றும் பார்வைகளிலிருந்து ஒருவரால் விடுபட முடியும்.

மிகச்சிறந்த ஒரு புத்தகத்தால் ஒருவரின் கவனச் சிதறல் பிரச்னையைச் சரிசெய்ய முடியும். தூக்கம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். தூக்க நேரம் நெறிப்படும்.

புத்தகம் வாசிப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம் குறையும்.

குழந்தைகள், முதியவர்களுக்கு வாசிப்பு கட்டாயம். ஏன் தெரியுமா?

குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும்போது, வார்த்தைகளின் ஓசைகளையும் அர்த்தங்களையும் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அவற்றின் பின்னணியிலுள்ள எழுத்துகளைப் புரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் வாசிப்பு தேவை. எந்தவொரு வார்த்தையையும், மூளை, குறியீடுகளாகத்தான் ஞாபகம் வைத்துக்கொள்ளும் என்பதால் வாசிக்க வாசிக்க, அவை யாவும் குழந்தையின் மூளைக்குள் குறியீடுகளாகவோ, சொற்களாகவோ உருமாறும். இப்படியாகக் குறியீடுகள் சொற்களாகும் நிலை ‘Word Recognition’ எனப்படும். உருவாகும் சொற்களின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் நிலை ‘Comprehension’ எனப்படும். அர்த்தங்களின் அடிப்படையில், வார்த்தைகளைக் கோர்வையாக்குவது‘Fluency’ எனப்படும். இவை அனைத்தும், ஒரே நேரத்தில் இணைந்து நடக்கும்போது பேச்சுக்கலை குழந்தைக்கு எளிமையாகும். குழந்தைகள் மொழி உச்சரிப்பில் சரளமாக இருக்க வாசிப்பு அவசியம்.

கல்வியறிவு என்பது வாசிப்பை அடிப்படையாக வைத்துதான் அமையும் என்பதால், குழந்தைகளின் கற்றல்திறனை அதிகப்படுத்தவும் வாசிப்பு அவசியம். இந்த இடத்தில், பல பெற்றோரும் செய்யும் தவறான விஷயம், குழந்தைகளைப் பாடப் புத்தகங்களை மட்டும் படிக்கவைப்பது. குழந்தைக்கு ஆர்வமுள்ள அனைத்துப் புத்தகங்களையும் வாசிக்க அவர்களை அனுமதிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு, பெற்றோர் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவது நல்லது.

குழந்தையைச் சத்தமாக வாசிக்கச் சொல்வதன் மூலம் அவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்தலாம். ஏற்ற இறக்கங்களோடு பேச அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

வாசிப்புப் பழக்கம் ஞாபகமறதிக்கான தீர்வாக அமையும் என்பதால், முதியவர்கள் வாசிப்பைப் பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. கேட்ஜெட்ஸின் உபயோகத்தோடு வாசிப்பதென்பது கண்களுக்கும் உடல்நிலைக்கும் பிரச்னையைத் தரலாம்; புத்தகமாகப் படிப்பதே சிறந்தது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும்போது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற பிரச்னைகள் வராமல் தவிர்க்கலாம். `இளம் வயதில் வாசிப்பு அதிகமாக இருந்தால், வயதான பிறகு ஞாபகமறதி தொடர்பான பிரச்னைகள் 32 சதவிகிதம் தடுக்கப்படும்’ என்பது மேற்கத்திய ஆய்வொன்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

“வாசிப்பு, மனநலனுக்குத் தரும் நன்மைகள் என்னென்ன?’’ என்று உளவியல் ஆலோசகர் தீப்தியிடம் கேட்டோம்.

“ஒருவர் என்ன மாதிரியான புத்தகத்தைப் படிக்கிறார் என்பதைப் பொறுத்துதான், அதனால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் அமையும். உதாரணமாக, அதிக கதாபாத்திரங்கள்கொண்ட புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு, கற்பனைத்திறன் மேம்படும். நிறைய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதால், நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது ஞாபகசக்தியை அதிகரிக்கும். ஞாபகசக்தி அதிகரிக்கும்போது சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இயங்க முடியும். இதுவே இலக்கியம் சார்ந்து நிறைய படிப்பவர் எனில், அவருக்கு மொழிப் புலமை அதிகரிக்கும். அப்படிப்பட்டவர்கள், நிறைய புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடியும். வார்த்தைகளுக்கு மத்தியிலிருக்கும் நுண்ணரசியல், ஒரே அர்த்தத்தைக்கொண்ட வெவ்வேறு வார்த்தைகளின் பின்னணி, சொற்களின் உள்ளர்த்தங்கள் போன்றவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும். பாசிட்டிவ்வான கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கும்போது, வாழ்க்கையும் அப்படியே மாறும். ஒவ்வொரு புத்தகத்தைப் படிப்பதால் ஒவ்வொரு வகையான பலன் கிடைக்கும் என்பதால், ‘இது படித்தால் இப்படி நடக்கும், இந்தப் பலன் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்போடு புத்தகங்களை வாசிக்க வேண்டாம்.

எந்த மாதிரியான புத்தகங்களை நெருடலில்லாமல் படிக்க முடிகிறதோ, அவற்றைக் கண்டெடுத்து படிப்பதே போதுமானது. தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையும் அடுத்த முயற்சிக்குத் தயாராவதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும் புத்தக வாசிப்பில் அதிகரிக்கும்.

ஹெல்த்: வாழ்நாளை அதிகரிக்கும் வாசிப்பு!
வாசிப்பென்பது மனதளவில் ஒருவரின் சுற்றத்தையே மாற்றியமைக்கும் அளவுக்கு ஆழமானது. எனவே, மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கான சிறந்த தீர்வாக அது இருக்கும். `நான் மனஅழுத்தத்தில் இருக்கிறேன். புத்தகம் வாசிக்கப் போகிறேன்’ என்பவர்கள், ‘என்ன படிக்கிறோம், எதைப் படிக்கிறோம்’ என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களுக்கான புத்தகம் எந்தத் துறையைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை, யாருடைய பரிந்துரையுமின்றி நீங்களே முடிவு செய்யுங்கள்.

வாசிப்பு, பகுப்பாய்வுத் திறனை அதிகரிக்கும். ஆகவே, சுயம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். இந்தத் தேடல், வாழ்க்கையில் அடுத்த படிநிலைக்குச் செல்ல உதவும்” என்கிறார் அவர்.

ஆக, வாழ்க்கை சிறக்க வாசிப்பை நேசிப்போம்!

கவிதை நல்லது!

வாசிப்புப் பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து யேல் பல்கலைக்கழகம் 2016-ம் ஆண்டு ஆய்வொன்றை மேற்கொண்டது. ஏறத்தாழ 3,600 பேருக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘தினமும் குறைந்தபட்சம்

30 நிமிடங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு அவர்களின் ஆயுள்காலம் இரண்டு வருடங்கள் அதிகரிக்கின்றன’ என்பது தெரியவந்திருக்கிறது. `பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்களைவிட கதைப் புத்தகங்கள், கவிதைகள் சார்ந்த வாசிப்புகள்தான் மூளை வளர்ச்சிக்கு நல்லது’ எனக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். ‘பல கதாபாத்திரங்களைக்கொண்ட புனைவுகளை வாசிப்பவர்கள் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள்’ என்றும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது!

Comments are closed.