வசீகர சருமம், பளபள கூந்தல், பிரகாச கண்கள்… WFH புத்துணர்வு ஆலோசனைகள்!

இதுநாள்வரை கூந்தலையும் சருமத்தையும் சரியாகப் பராமரிக்கத் தவறியவர்கள், அதன் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தோற்றப் பொலிவுடன் மனதிலும் புத்துணர்வு பெருகும்.

கொரோனா கால ஊரடங்கு நாள்களில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை. வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல், வீட்டை விட்டு வெளியேறத் தேவையில்லாத நிலைமை போன்றவை, சிலருக்கு சுய பராமரிப்பில் பின்னடைவை ஏற்படுத்தும். தங்களுக்கான தனிப்பட்ட கவனிப்பிலிருந்து விடுபட்டிருப்பார்கள்.

அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருந்தால்தான் சலிப்பு, சோர்வு நீங்கி செய்யும் வேலையிலும் நகரும் நாள்களிலும் புத்துணர்வு தொற்றிக்கொள்ளும். அதற்கு அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் ஆலோசனைகள் இங்கே.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆரோக்கியம், மனநிம்மதி, அழகு இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அதனால் வீட்டிலிருந்து வேலைசெய்யும்போதும் புத்துணர்வுடன் இருந்தால் மட்டுமே வேலையில் சோர்வும், வாழ்க்கையில் சலிப்பும் ஏற்படாமல் தப்பமுடியும்.

`பிளாண்டு சிக் லீவ் தெரியுமா?’ – வொர்க் ஃப்ரம் ஹோம் மக்களின் மீம்ஸ் கலாட்டா! | Part 7
இதுநாள்வரை கூந்தலையும் சருமத்தையும் சரியாகப் பராமரிக்கத் தவறியவர்கள், அதன் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் உங்கள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் மனதில் புத்துணர்வும் பெருகும்.

ஆரோக்கியமான கூந்தல்!

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விடாமல் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து மிதமாக வறுத்துக்கொள்ளவும். அதனுடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமாகச் சூடுசெய்துகொள்ளவும்.

இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு, வெந்நீரில் டவலை முக்கியெடுத்து, அதை நன்கு பிழிந்து, தலையில் கட்டிக்கொள்ளவும். இதனால் கூந்தலின் வேர்ப்பகுதிவரை எண்ணெய் ஊடுருவிச் சென்று பலனளிக்கும்.

20 நிமிடங்களுக்குப் பிறகு தலையை நன்கு அலசவும். ஷாம்பூ பயன்படுத்துவதற்குப் பதிலாக சீயக்காய்த் தூள் பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்குச் செய்யலாம்.

அலுவலகம் செல்லும்போது தலைக்கு எண்ணெய் வைக்க விரும்பாதவர்கள், தற்போது வீட்டிலேயே இருக்கும் நிலையில், தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைக்கலாம். தினசரி அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறை தலைக்குக் குளிக்கலாம்.

ஹேர் பேக்
ஒரு கிண்ணத்தில் நான்கு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு, மூழ்குமளவுக்குத் தண்ணீர் விட்டு, இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில், அரை மூடி தேங்காயைத் துருவி, அதை மிக்ஸியில் அரைத்து நன்கு பிழிந்து பால் எடுக்கவும். இருமுறை அரைத்துப் பால் எடுத்த பின், வெந்தயத்தை அந்தத் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இந்த விழுதை தலை (ஸ்கால்ப்) மற்றும் கேசத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பிளவுபட்ட முடிகளுடன் வறண்டிருக்கும் கூந்தல் பட்டுப்போல மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். தவிர, அடிக்கும் வெயிலுக்கு உடலையும் குளிர்விக்கும்.

குறிப்பு:

தலைக்குக் குளிக்கும் நாளன்று, அரிசிக் கழனியை எடுத்துவைத்துக்கொள்ளவும் (சாதம் வைக்க, அரிசியை ஒருமுறை தண்ணீரில் அலசிவிட்டு, பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும். அரிசியை உலையில் சேர்த்த பின்னர் எஞ்சியிருக்கும் அரிசி ஊறிய தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். இதுதான் அரிசி கழனி). தலைக்குக் குளித்துமுடித்ததும் கடைசியாக அரிசி ஊறிய அந்தக் கழனித் தண்ணீரைவிட்டு கேசத்தை அலசினால் கூந்தல் பளபளக்கும்.

முகம் வசீகரமாக…
இதுநாள்வரை கவனிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படும் சருமத்தைப் பொலிவாக்க உதவும் எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.

சிம்பிள் மசாஜ்

`ஸ்கின் ஃபாஸ்டிங்’ – சருமத்துக்கு அழகு, ஆரோக்கியம் தரும் புது ட்ரெண்டு!
இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன் ஒன்றிரண்டு குங்குமப் பூவைச் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, விரல்களால் கழுத்திலிருந்து மேல் நோக்கி முகத்துக்கு மசாஜ் செய்யவும். வாரம் மூன்று முறை இதைச் செய்து வந்தால் பொலிவிழந்த முகம் பிரகாசிக்கும்.

டீடாக்ஸ்
மூன்று டீஸ்பூன் கிரீன் டீயுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துத் தேய்த்துக் கழுவவும்.

முகத்தின் இறந்த செல்கள் நீங்கி முகம் இன்ஸ்டன்ட்டாக ஜொலிக்கும்.

சருமச் சுருக்கங்கள் நீங்க
இரண்டு டீஸ்பூன் கடலைமாவு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் (தூள் இல்லையென்றால் சாதாரண மஞ்சள்தூள்) இரண்டையும் காய்ச்சாத பாலில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்(வறண்ட சருமத்தினர் காய்ச்சாத பாலுக்கு பதிலாக பால் ஆடையைச் சேர்த்துக்கொள்ளலாம்).

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சருமச் சுருக்கங்கள், தொய்வு நீங்கி சருமம் இறுக்கமாகும்

எண்ணெய்ப் பசை சருமத்தினருக்கு
சந்தனக்கல்லில் இழைத்தெடுத்த சந்தனம் அல்லது முல்தானிமட்டி ஒரு டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேவையான அளவு பன்னீர் சேர்த்துக் கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவவும்.

10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவவும். இது சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்குவதுடன் முகப்பருக்கள் மற்றும் சூட்டினால் வரும் கொப்புளங்களையும் கட்டுப்படுத்தும்.

கருவளையம் நீங்க…
ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த பச்சைப் பாலில், இரண்டு வட்ட வடிவப் பஞ்சுத் துண்டுகளை நனைத்து, மூடிய இமைகளின் மேல் வைத்திருக்கவும்.

10 நிமிடங்கள் கழித்துப் பஞ்சை எடுத்துவிட்டு கண்களைக் கழுவவும். இதை தினமும் செய்துவந்தாலே போதும், கருவளையம் நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.

கண்ணெரிச்சல் நீங்க…
சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து, தண்ணீரில் நன்கு அலசிக்கொள்ளவும். பிறகு கைகளால் நன்கு மசித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ எடுத்துக்கொள்ளவும். கண்களை மூடி கண்ணிமைகளின் மேல் வட்ட வடிவப் பஞ்சை வைத்து, அதன் மேல் மசித்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்துக் கண்களைக் கழுவவும். இது கண்ணெரிச்சலை நீக்கி கண்களைக் குளிர்ச்சிப்படுத்துவதுடன், கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களையும் போக்கும்.

உடலுக்கும் புத்துணர்ச்சி அவசியம்!
வீட்டிலிருந்து வேலைசெய்பவர்கள், பகலுக்கு ஒரு பைஜாமா, இரவுக்கு வேறொரு பைஜாமா என்கிற வகையில் ‘வீட்டுலதான இருக்கோம்’ என அசட்டையாக இருக்கத் தேவையில்லை.

அலுவலகம் செல்லும் நாள்களில், காலையில் குளிப்பதில் ஆரம்பித்து தினசரி கடைப்பிடித்து வரும் வழக்கங்களை அப்படியே கடைப்பிடிக்கலாம். அப்போதுதான் மனம் சோர்வடையாமல் உற்சாகமாகவும் கவனத்துடனும் வேலைசெய்ய முடியும்.

வீட்டில் வேலைசெய்வதற்காக தனி வொர்க் ஏரியாவை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அங்கு ஒரு கண்ணாடியை மாட்டி வைத்துக்கொண்டால், அடிக்கடி அதில் உங்களைப் பார்க்கும்போது, இன்ஸ்டன்ட் புத்துணர்வு கிடைக்கும்.

இறுக்கமான உடையைத் தவிர்த்து, நல்ல காற்றோட்டமான காட்டன் உடைகள் அணியலாம். மனதில் புத்துணர்வைத் தூண்டும் விதமாக, சிறிதளவு பெர்ஃப்யூமும் பயன்படுத்தலாம்.

அலுவலகம் சென்றபோது இருந்தது போன்ற உடல் இயக்கம் தற்போது குறைந்திருக்கும். தொடர்ந்து பல மணிநேரம் உட்கார்ந்தபடியே வேலைசெய்வதைத் தவிர்த்து, சிறு சிறு இடைவேளை எடுத்துக்கொள்ளவும்.

அந்த நேரத்தில் வீட்டிலேயே சிறிது நேரம் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, அல்லது எளிய உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.”

Comments are closed.