சோனியாவை பார் டான்சர் என கூறுவதா? என கண்டித்த குஷ்புவால் பாஜக.வில் சர்ச்சை

தமிழக பாஜகவின்தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார் டான்சர் கூறியதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த பொங்கல் தினத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது கோயம்புத்தூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தில் கடந்த திங்கள் கிழமை பேசிய அவர், நாக்பூரிலிருந்து வந்த “நிக்கர்வாலா” (டிரவுசர் அணிந்த சிறுவர்கள்) ஒருபோதும் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்து மறைமுகமாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில், “இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு பார் டான்சர் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்க முயற்சிக்கும்போது, ​​நாங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் உரிமை உள்ளது என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் நிர்மல்குமாரின்,”# பார்-டான்சர்” என்ற ஹேஷ்டேக்குடன் அவரது ட்விட்டுக்கு பதிலளித்த நடிகை குஷ்பு, “ஒரு பெண்ணை இத்தகைய இழிவான முறையில் அழைப்பது முற்றிலும் தவறான செயல். இது போன்ற தரக்குறைவான சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுடன் இணைந்து போராடி, ஜனநாயக ரீதியாக தேசத்தை உருவாக்க முயற்சி செய்வோம். ஆகவே நிர்மல் குமார் தனது ட்விட்டை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும் நிர்மலின் ட்விட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, பல இந்துத்துவ சிந்தனையாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள், நிர்மல்குமார் தவறாக எதையும் பதிவிடவில்லை. அவர் இத்தாலியில் என்ன செய்தாரோ அதைத்தான் கூறியிருக்கிறார். இந்த சொல் (பார் டான்சர்) அவமானகரமான சொல் அல்ல என்று கூறியுள்ளதாக நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுக்காக தான் மன்னிப்பு கேட்க முடியாது,” என்று அவர் கூறினார்.

இதனால் சொந்த கட்சியை சேர்ந்தவரை சமூகவலைதளங்களில் விமர்சித்த நடிகை குஷ்பு-க்கு பாஜக கட்சியில் பெரும் கண்டனக்குரல் எழும்பி வரும் நிலையில், ஒரு சில பாஜக தலைவர்கள், குஷ்பு இந்த விவகாரத்தில், சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு பதிலாக கட்சி தலைமையிடம் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.