கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நாளை முதல் : விருப்பமில்லாதோர் தவிர்க்கலாம்

இந்திய அரசாங்கம் வழங்கிய கொவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரில் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கொவிட் தடுப்பூசி மும்பாயில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

500,000 தடுப்பூசி டோஸ்களுடன் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 281 விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தின் விசேட குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட தடுப்பூசியின் எடை 1323 கிலோ கிராமாகும்.

இத்தடுப்பூசிகள் விமான நிலைய வளாகத்தில் உள்ள குளிரூட்டியில் களஞ்சியப்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தடுப்பூசிகள் 2-8 இடைப்பட்ட டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படும்.

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பணியாளர்கள், 120,000 முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக சீன அரசாங்கமும் 300,000 தடுப்பூசிகளை வழங்கவுள்ளது என கொவிட் தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகருமான லலித் வீரதுங்க அவர்கள் தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தனிநபர்களின் சுயாதீனமான முடிவாகும். அதை விரும்பாதவர்கள் ஏற்றிக்கொள்ளாதிருக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் விநோத் கே ஜேகப், விமான நிலையங்கள், விமான சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிரி, அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.