தீர்வு இல்லாத அரசமைப்பு எந்தவிதப் பயனும் அற்றது : சுமந்திரன் எம்.பி.

தீர்வு இல்லாத அரசமைப்பு
எந்தவிதப் பயனும் அற்றது

தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கூட்டத்தின்
பின்னர் சுட்டிக்காட்டினார் சுமந்திரன் எம்.பி.

“புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தால் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். அது இல்லையேல் அந்த அரசமைப்பு எந்தவித பிரயோசனமும் அற்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை விரைவில் கூட்டுவது என இன்று (நேற்று) நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அழுத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பேசியிருக்கின்றோம்.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு வேறு வேறு போர்வைகளின் கீழ் நடைபெறுகின்றது. தொல்லியல் திணைக்களம் மிக மோசமாக கிழக்கு மாகாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலும் செயற்படுகின்றது. மகாவலி சட்டம், வனஇலாகா என பல்வேறு சட்டங்களைப் பயன்படுத்தி எமது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

தொல்லியல் திணைக்களம் மக்களின் வழிபாட்டு தலங்களை மாற்றி அமைக்கும் மோசமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. வவுனியா வெடுக்குநாறி மலை, முல்லைத்தீவு குருந்தூர் மலை போன்றவற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் தயாராகி வருகின்றோம்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் எழுத்தாணை மனுத் தாக்கல் செய்துள்ளோம்.

யாழ்ப்பாணத்திலும் மோசமான நில அபகரிப்பு இடம்பெறுகின்றது. தொல்லியல் திணைக்களம் சில இடங்களை அடையாளப்படுத்தி ஏற்கனவே ஆராய்ச்சி என வேலைகளைத் தொடங்கியுள்ளது. இதைத் தடுப்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளன.

வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்கள் இந்த விடயங்களையும், அரசியல் கைதிகளின் விடயம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயம், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம், மலையகத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா பிரச்சினை எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு எங்களது கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்குப் பல்வேறு சிவில் அமைப்புக்களும், சமய அமைப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளன. அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றபோது மக்களுக்குத் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். எனவே , அனைவரும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாகக் கேட்டு நிற்கின்றோம்.

இவற்றுக்கும் அப்பால் விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பாகவும், அதற்கு 3 கட்சிகள் இணைந்து அனுப்பிய கடிதம் சம்மந்தமாகவும் கலந்துரையாடினோம். இந்த ஒற்றுமை மிகவும் அவசியமானது. இதுவரை காலம் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ற அடிப்படையில் வேறு இரு கட்சிகளையும் மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். இதனால் நாம் மூன்று கட்சிகளும் இணைந்து ஒரே நிலைப்பாட்டில் எங்களுடைய விண்ணப்பத்தை 47 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பியுள்ளோம். தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கே நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம்.

மேலும், இந்த அரசு புதிய அரசமைப்பை உருவாக்கப் போவதாக ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளார்கள். அதற்குக் கூட்டமைப்பு சார்பான யோசனைகளைக் கடந்த டிசம்பர் மாதம் மிகவும் விபரமாக அனுப்பி வைத்துள்ளோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தால் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குக் கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். அது இல்லையேல் அந்த அரசமைப்பு எந்தவித பிரயோசனமும் அற்றது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

ஜெனிவா தொடர்பில் தற்போது நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதியின் புதிய ஆணைக்குழுவால் எந்தவித பிரயோசனமும் கிடையாது. அது ஒரு கேலிக்கூத்து. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலிக்க இன்னொரு ஆணைக்குழுவா? இது ஒரு கண்துடைப்பு நாடகம். சர்வதேசத்தை முட்டாளாக்கும் முயற்சி. இந்த ஆணைக்குழுவால் எமக்கு எந்தவித நம்பிக்கையும் கிடையாது. இப்படியான செயற்பாடுகளைக் கைவிட்டு அரசு செயற்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தினாலே முன்னேறலாம். இந்த ஆணைக்குழுவுடன் இணைந்து உடலகம ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு சிபார்சுகள் என அவர்களுடைய சொந்த ஆணைக்குழுக்களின் சிபார்சுகள் இருக்கும்போது அவற்றை ஆராய இன்னொரு ஆணைக்குழு தேவையில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை நிராகரிக்கும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கையின் சுதந்திர தினத்தை நாங்கள் அனுஷ்டிப்பதில்லை. அதைப் புறக்கணித்து வந்துள்ளோம். கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் அந்த அரசு சிறிய நல்லெண்ண சமிஞ்ஞைகளைக் காட்டியபோது எமது நல்லிணக்கத்தைக் காட்ட நானும், சம்பந்தன் ஐயாவும் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்டோம். அந்த அரசின் காலத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டபோது நாங்கள் தொடர்ந்தும் புறக்கணித்தோம். ஆகவே, இம்முறையும் சுதந்திர தின நிகழ்வை நாம் புறக்கணிப்போம்” – என்றார்.
………

Leave A Reply

Your email address will not be published.