மேற்கிந்திய தீவுகள் 395 ஓட்ட வெற்றி இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 395 ரன் வெற்றி இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களில் சுருண்டது.

171 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மொமினுல் ஹக் சதமும், லித்தோன் தாஸ் அரைசதமும் அடிக்க வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் 394 ரன்கள் முன்னிலை பெற, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிரேக் பிராத்வைட் (20), ஜான் கேம்ப்பெல் (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 4-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி நாளில் அந்த அணிக்கு 285 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கெட் இருந்தது. அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 37 ரன்களுடனும், போனர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கையில் மேயர்ஸ் சதம் அடிக்க, போனர் 86 ரன்னில் ஆட்டமிழந்தனர். போனர் ஆட்டமிழக்கும்போதுது வெஸ்ட் இண்டீஸ் 275 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட் இருந்த நிலையில், 115 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து வந்த பிளாக்வுட் 9 ரன்னிலும், ஜோஸ்வா டி சில்வா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிளாக்வுட் ஆட்டமிழக்கும்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஜோஸ்வா டி சில்வாவை வைத்துக் கொண்டு கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

டி சில்வா ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 392 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கேமர் ரூச் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கைல் மேயர்ஸ் 210 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.