உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து தப்பினார் ரணில்: மாட்டினார் மைத்திரி

இலங்கையில் 2019ஆம் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான பரிந்துரைகளை தமது அறிக்கையின் ஊடாக முன்வைக்கவில்லை எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு சபை கூட்டங்களில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அனுமதி அளிக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசமைப்பு குழப்பத்துக்குப் பின்னர், தன்னைப் பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கவில்லை எனப் பிரதமர், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்திருந்தார்.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீதே, குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு, ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையின் ஊடாக பரிந்துரை செய்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.