வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 223ரன் எடுத்துள்ளது. வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. வங்கதேச அணியில் ஷாகிப் அல் அசன், ஷத்மன் இஸ்லாம், முஷ்டாபிசுர் ரகுமான் ஆகியோருக்கு பதிலாக சவுமியா சர்க்கார், முகமது மிதுன், அபு ஜெயத் ஆகியோர் இடம்பிடித்தனர். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது.

பொறுப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கிரெய்க் பிரத்வைட் 48, ஜான் கேம்ப்பெல் 36ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 66ரன் சேர்த்தனர். இடையில் வந்த ஷாயன் மோஸ்லே 7 வெளியேறினார். முதல் டெஸ்ட்டில் இரட்டைசதம் விளாசி வெற்றிக்கு காரணமாக இருந்த கேல் மேயர்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வீரர் ஜெர்மைன் பிளாக்வுட் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதே நேரத்தில் நக்ருமா பொன்னர் பொறுப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். கூடவே விக்கெட்டை தக்க வைக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிதானமாக ஆடினர். அதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 90 ஓவருக்கு 5விக்கெட்களை இழந்து 223ரன் எடுத்திருந்தது. நக்ருமா 74*, ஜோஷ்வா டா சில்வா 22* ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசம் தரப்பில் அபு ஜெயத், தய்ஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2, சவுமியா சர்க்கார் ஒரு விக்கெட் எடுத்தனர். இன்னும் 5விக்கெட்கள் கைவசம் இருக்க வெஸ்ட் இண்டீஸ் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடரும்.

Leave A Reply

Your email address will not be published.