தமிழ் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக தேசியக் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இறங்கி உள்ளன

நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்காக பல தேசியக் கட்சிகளும், அவர்களின் முகவர்களாக சுயேட்சைக் குழுக்களும் இறங்கி உள்ளன என்று அம்மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மேலும்,

“இவர்களின் நோக்கம் இத்தேர்தலில் வெற்றி பெறுவதோ அல்லது ஆசனங்களை பெற்றுக் கொள்வதோ அல்ல. வெறுமனே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிப்பதே ஆகும். இவர்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் எமது மக்கள் நல்ல பாடம் கற்றுக்கொடுத்தே வருகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை நான்கு ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொள்ளும். அதற்குரிய மக்கள் ஆணையும், வல்லமையும் எமக்கு உள்ளது. இந்த ஆசன எண்ணிக்கையை குறைத்து வேறு ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பல முகவர்கள் இறங்கியுள்ளார்கள். அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் சிங்கள மக்கள், தமிழ் கட்சிகளுக்கோ முஸ்லிம் கட்சிகளுக்கோ வாக்களிப்பதில்லை. அதுபோல முஸ்லிம் மக்களும் சிங்கள கட்சிகளுக்கோ, தமிழ் கட்சிகளுக்கோ வாக்களிப்பது இல்லை. இதை உணர்ந்து தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.

Comments are closed.