திருக்கேதீஸ்வரம் ஆலய மஹா சிவராத்திரி விழாவில் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரம் பங்கேற்க அனுமதி.

திருக்கேதீஸ்வரம் ஆலய மஹா சிவராத்திரி விழாவில் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரம் பங்கேற்க அனுமதி.

மாவட்ட அரச அதிபர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

மன்னார் மாவட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இம்முறை மஹா சிவராத்திரியின்போது வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு அனுமதி வழங்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரம் சிவராத்திரி விழாவின்போது அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் வழமையாக மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவதுடன், அதில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வர்.

ஆனால், இம்முறை அவ்வாறாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோரை அனுமதிப்பது சிக்கலானது என்று நேற்றைய கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி மஹா சிவராத்திரி விழாவை சுகாதார முறைமைகளைப் பின்பற்றி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹா சிவராத்திரி அன்று நடத்தப்படும் பாலாவி தீர்த்தக் காவடி நிகழ்வை இம்முறை நடத்தாதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள், திருக்கேதீஸ்வர ஆலயப் பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.