தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை!

தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறை!
அரசு மீது சந்திரிகா கடும் குற்றச்சாட்டு

“இலங்கையில் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுபடுகின்றன. வடக்கு, கிழக்குத் தமிழர்களைக் கைவிடும் ஆட்சிப்போக்கே காணப்படுகின்றது.”

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் குற்றஞ்சாட்டினார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் இளைஞர்களுக்கு இராணுவத்தினர் நெருக்கடிகளையும், தொல்லைகளையும் கொடுத்து வருகின்றனர் என்று அங்குள்ள மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.

பௌத்தம் எனக் கூறிக்கொண்டு நாட்டின் அடிப்படையை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நாட்டில் சகல மக்களுக்குமான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இந்த நாடு சிங்கள, பௌத்தர்களுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. நாட்டின் நல்லிணக்கத்தை உருவாக்க எனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன்.

எனினும், போர் நிலவிய காரணத்தால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனது. இன்றைய ஆட்சியாளர்கள் நல்லிணக்கம் குறித்து எந்தவித சிந்தனையும் இல்லாது வேலைத்திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்.

இதேவேளை, எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த அரசமைப்பை ஐக்கிய தேசியக் கட்சி தடுக்காது ஆதரித்திருந்தால் இன்று எமது நாட்டின் நிலைமையே மாறியிருக்கும்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோசமான அடக்குமுறைகள் கையாளப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகள் வெகுதொலைவில் உள்ளன”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.