Drishyam – 2 : திரை விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி, சாய் குமார், அஞ்சலி நாயர்; இசை: அனில் ஜான்சன்; எழுத்து, இயக்கம்: ஜீத்து ஜோசப். வெளியீடு: அமெஸான் பிரைம்.

2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த Drishyam திரைப்படத்தின் இரண்டாவது பாகம். பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார்.

முதலில் Drishyam படத்தின் கதையைப் பார்க்கலாம். உள்ளூரில் கேபிள் டீவி நடத்தும் ஜார்ஜ் குட்டிக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகளிடம் ஒரு இளைஞன் மோசமாக நடந்துகொள்ள, அவனை அவள் கொன்றுவிடுகிறாள். பிறகு, குடும்பமே சேர்ந்து அந்தக் கொலையை எப்படி மறைக்கிறது என்பதுதான் அந்தப் படத்தின் கதை.


முந்தைய படத்தின் கதை நடந்த ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. கேபிள் டிவி நடத்திக்கொண்டிருந்த ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) இப்போது சற்று வசதியான மனிதராகியிருக்கிறார். கொஞ்சம் கடன் வாங்கி, ஒரு திரையரங்கையும் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு சினிமா எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உள்ளூரில் இருப்பவர்கள் அரசல்புரசலாக, அந்த இளைஞனின் கொலையோடு ஜார்ஜ் குட்டியை இணைத்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். கொலை நடந்த சமயத்தில் ஜார்ஜ்குட்டி மீது உள்ளூர் மக்களுக்கு இருந்த அபிமானம் மறைந்து, பொறாமை உருவாகியிருக்கிறது.

இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் காவல்துறையின் ஐஜி தாமஸ் (முரளி கோபி), இந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார். கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் எங்கேயிருக்கிறது என்பதை கண்டறிவதற்காக ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தைச் சுற்றி ஒரு வலையை விரிக்கிறார். அந்த வலையில் இருந்து ஜார்ஜ்குட்டியும் அவரது குடும்பத்தினரும் எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு வெற்றிகரமான படத்தின் Sequel முந்தைய படத்திற்கு இணையாக, பல தருணங்களில் அதைவிட அதிகமாக ரசிக்கும் வகையில் இருக்கிறது. படத்தின் முதல் பாதி மிக மெதுவாகத் துவங்குகிறது. சுமார் 45 நிமிடங்கள் கழிந்த பிறகும் பெரிதாக ஏதும் நடக்கவில்லை என்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகு மெதுவாக வேகமெடுக்கும் திரைக்கதை, க்ளைமேக்ஸை நெருங்கும்போது சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

படத்தின் முதல் பாதி ஏன் அவ்வளவு மெதுவாக நகர்ந்தது என்பதற்கான நியாயங்களும் பிற்பாதியில் இருப்பதால், ‘அட’ என்று வியக்கவைக்கிறார் ஜீத்து ஜோசப். தராசை சற்று துல்லியமாகப் பிடித்தால், ஒன்றிரண்டு குறைகள் கண்ணில் படலாம். ஆனால், அதையும் தாண்டி ரசிக்கவைக்கிறது திரைக்கதை.

முதல் பாகத்தில் நடித்திருந்த அதே நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் சிறப்பான நடிப்போடு தொடர்ந்திருக்கிறார்கள். மோகன்லாலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதகளம் செய்திருக்கிறார் மனிதர். ஐஜியாக நடித்திருக்கும் முரளி கோபிக்கும் இது குறிப்பிடத்தக்க படம். பிரதான பாத்திரங்கள் தவிர, சின்னச் சின்ன பாத்திரங்களில் வருபவர்கள்கூட கவனிக்க வைத்திருக்கிறார்கள். டீக்கடைக்காரராக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கும் கோழிக்கோடு நாராயணன் நாயர்கூட மறக்க முடியாத பாத்திரமாகியிருக்கிறார்கள்.

அனில் ஜான்சனின் பின்னணி இசை படத்தின் பரபரப்புத் தன்மையைத் தக்கவைக்க உதவுகிறது. சில காட்சிகள் தொலைக்காட்சித் தொடர்களின் காட்சிகளைப் போல இருக்கின்றன. ஆனால், திரைக்கதையின் பலம், இதையெல்லாம் கவனிக்கவிடாமல் நம்மை படத்தோடு ஒன்றை வைத்திருக்கிறது.

த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம். ரசித்த பிறகு படத்தின் சஸ்பென்ஸை யாரிடமும் சொல்லாதீர்கள்!

முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்

Leave A Reply

Your email address will not be published.