மொட்டு’ கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்கவும் கோட்டா, மஹிந்தவிடம் பங்காளிகள் கோரிக்கை.

மொட்டு’ கூட்டணிக்கு புத்துயிர் கொடுக்கவும் கோட்டா, மஹிந்தவிடம் பங்காளிகள் கோரிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு புத்துயிர் கொடுத்து அதனைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் கூட்டணி கட்டியெழுப்பட்டு, ஓரணியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 இற்கு மேற்பட்ட பங்காளிக்கட்சிகள், அண்மைக்காலமாக தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றன. முதல் இரு சந்திப்புகளும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் வதிவிடத்தில் நடைபெற்றது. மூன்றாவது சந்திப்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போதே ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை’ கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுங்கட்சியின் பிரதானிகளிடம் முன்வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ‘ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு’ எனும் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது. எனினும், தேர்தலின் பின்னர் கூட்டணியின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்நிலையில் மொட்டு கட்சியை (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை) மட்டும் பலப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே, தனிவழி செல்லாவது, கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதற்கு பங்காளிகள் தீர்மானித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி, பிரதமர் உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்களை விரைவில் சந்தித்து இக்கோரிக்கையை முன்வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆளுங் கூட்டணிக்குள் அண்மைக்காலமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.