டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலை.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறவரும் நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டு வருகின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பிரதான நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. தரவுகள் பதிவுசெய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் நோயாளிகளுக்கு ‘சுகாதார சேவை அணுகல் அட்டை’யொன்று வழங்கப்படுகின்றது.

அந்த அட்டையை கொண்டுசென்றால் வைத்தியர்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்கு இலகுவானதாக இருக்கும். நோயாளிகள் தொடர்பான தகவல்கள் கணினியில் இருக்கும்.

அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் டிக்கோயா வைத்தியசாலையும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநோயாளர்கள் சிகிச்சைப்பிரிவு மற்றும் கிளினிக் வரும் நோயாளிகளுக்கு குறித்த அட்டை வழங்கப்படவுள்ளது.

மருத்துவ ஆய்வு அறிக்கைகள் உட்பட பல ஆவணங்கள் கணினி மயப்படுத்தப்படும். இதன்படி சிகிச்சைபெற வருபவர்கள் குறித்த அட்டையை மட்டும் கொண்டுவந்தால் போதுமானதாக இருக்கும்.

நுவரெலியா மாவட்டத்தில் மாகாணசபையால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலையொன்று இவ்வாறு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.