முஸ்லிம்களை வேண்டுமென்றே பழிவாங்குகின்றது கோட்டா அரசு ரிஷாத் எம்.பி. கடும் சீற்றம்.

“முஸ்லிம் சமூகத்தை வேண்டுமென்றே பழிவாங்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. அதிலும்,குறிப்பாக அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களை பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை நாடியுள்ளேன்.”

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்றது முதல் என் மீதும், என் சமூகத்தின் மீதும் இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுக்களை அரசிலுள்ள சிலர் சுமத்தி வருகின்றனர். அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமே ஆகியோரின் உளறல்கள் உச்சத்தில் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். அதில் 250 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மட்டும் தற்போது சிறைகளில் இருக்கின்றார்கள். ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

என்னையும் பல தடவைகள் அழைத்து விசாரணை செய்து சிறையில் அடைக்க முயன்றனர். ஆனால், குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்க முடியாத சந்தர்ப்பத்தில் என்னை விடுவித்தனர்.

தேவையில்லாமல் என்னைச் சீண்டிப் பார்க்கும் அமைச்சர் விமலுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு செய்துள்ளேன். அடுத்த வாரம் அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கையையும் நாடவுள்ளேன்.

முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு தொடர்ந்து அடக்க முயன்றால் அதன் விபரீதங்கள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் உச்சத்தில் இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.