அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் சஜித் அணி தெரிவிப்பு.

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றஞ்சாட்டினார்.

பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமை மிக மோசமான நிலைமையாகும் எனவும் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2020ஆம் ஆண்டளவில் இந்த நாட்டின் மொத்தக்கடன் 15 ட்ரில்லியனாக இருந்தது. இவற்றில் தேசிய கடனாக 56 வீதமும் சர்வதேச கடன் 44 வீதமாகவும் காணப்பட்டது. தற்போது தேசிய கடன் வீதமானது நூறுக்கு 110 வீதம் என்ற ரீதியில் காணப்படுகின்றது.

உலகில் நடுத்தர அபிவிருத்தி நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் லெபனானும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளது. இந்நிலையில் கடன் நெருக்கடி இல்லை எனவும், இலகுவாக கடன்களைச் செலுத்துவோம் எனவும் அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.

அதேபோல், 32 பில்லியன் டொலர் கைவசமாக இருக்கின்றது என அரசு கூறுவது உண்மையென்றால் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கேட்டமையும், தற்போது பங்களாதேஷிடம் ஒரு பில்லியன் டொலர் கடன் பெற்றுக்கொள்ள பேச்சு நடத்துகின்றமையும் ஏன்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பங்களாதேஷ் விஜயம் ஜெனிவாவை அடிப்படையாகக் கொண்டதாக நினைத்தோம். ஆனால், கடன்களைக் கேட்கவே பிரதமர் அங்கு சென்றுள்ளார். பங்களாதேஷ் நாட்டிடம் கடன் கேட்கும் நிலைக்கு வீழ்ச்சி கண்டுவிட்டோமா? இது நாட்டின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் செயலாகும்.

கடந்த ஆண்டில் 690 பில்லியன் ரூபாவைப் புதிதாக அரசு அச்சடித்தது.இதுவே ரூபாவுக்கான பெறுமதி வீழ்ச்சி காண பிரதான காரணமாகும். உலக நாடுகளில் அமெரிக்க டொலருக்கான பெறுமதி வீழ்ச்சி காணும் வேளையில் இலங்கையில் மாத்திரம் டொலருக்கான பெறுமது அதிகரிக்கின்றது. இதுவே அரசின் பொருளாதார முகாமைத்துவ பலவீனத்தன்மையை வெளிப்படுத்துகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.