முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு வியட்னாம் ஒத்துழைப்பு.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக் (Ho Thi Thanh Truc) இன்று (30) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார்.

ஜனாதிபதி அவர்களும் புதிய வியட்னாம் தூதுவரும் தற்போதைய இருதரப்பு உறவுகள், எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். வியட்னாம் அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்த ஹோ தீ தான் ரக் அவர்கள், இலங்கையுடனான உறவுகளை பேணுவதற்கு வியட்னாம் உயர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமது நாடு முகங்கொடுத்த சிக்கலான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை வியட்னாம் தூதுவர் பாராட்டியதோடு, தமது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, நட்புறவை மென்மேலும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வியட்னாமிற்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவை பாராட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார். “விவசாய பொருளாதார அபிவிருத்தி, வறுமையை ஒழித்தல், கிராமிய மக்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்றவை நாம் முன்னுரிமை வழங்கியுள்ள விடயங்களாகும். அந்நோக்கங்களை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் இறுதி நோக்கம் குறைந்த வருமானம், மத்திய தர வருமானம், கிராமிய, நகரங்கள் போன்ற அனைத்து சமூக மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக்கொடுப்பதாகும். நாம் அபிவிருத்தியை பார்ப்பது பாகுபாட்டு கண்ணோட்டத்தில் அல்லாமல் நாட்டின் அனைத்து மக்களையும் கவனத்திற் கொண்டே ஆகும்.” என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக மானியங்களை வழங்கி உயர் விலையை உறுதிப்படுத்துவதன் மூலம் எல்லா இனங்களையும் உள்ளடக்கிய வகையில் விவசாயிகள் பயன் பெறுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் பயங்கரவாத செயல்களினால் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் காணப்படுகின்ற பொருளாதார முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அதன் மூலம் பயனடையுமாறு வியட்னாமிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்காக வியட்னாம் வர்த்தகர்களை ஊக்கப்படுத்துவதாகவும் வர்த்தக, சுற்றுலா துறைகளின் அபிவிருத்திக்கு உயர் முக்கியத்துவம் வழங்குவதாகவும் வியட்னாம் நாட்டுத் தூதுவர் உறுதியளித்தார்.
இலங்கை – வியட்னாம் இராஜதந்திர உறவுகள் 1970 ஜூலை 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகும்.

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, வியட்னாம் தூதுவர் அலுவலகத்தின் உப தலைவர் திரான் த்ரொங் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.