யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க ஆவண செய்யுங்கள்!

கொரோனாவைக் காரணம் காட்டி பூட்டப்பட்டுள்ள

யாழ். நகர வர்த்தக நிலையங்களை
உடன் திறக்க ஆவண செய்யுங்கள்!

– மாவட்ட அரச அதிபரிடம் வர்த்தக சங்கம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி தடைசெய்யப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க ஆவண செய்யுமாறு யாழ். மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான க.மகேசனிடம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ச.சிவலோகேசன், யாழ். மாவட்ட அரச அதிபருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் யாழ். நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சில பாரபட்சமான விடயங்களும் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

01. வர்த்தகர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்ட நிலையில் அதே முடக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், நகை அடகு நிலையங்கள் போன்றவை வழமை போல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது எந்த விதத்திலும் நியாயமாகக் கருத முடியாதுள்ளது.

02. கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுமார் 1,440 நகர வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அறிகின்றோம். இதில் ஆக 43 பேருக்கு மாத்திரமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது. இது விகித அடிப்படையில் 3 சதவீதமாகக் கருதப்படுகின்றது.

03. நகரத்தின் முக்கிய பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் மொத்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய முடியாதுள்ளது.

04. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடையானது அவர்களை மேலும் பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

05. நாட்டின் எல்லா பகுதிகளிலும் கொரோனாத் தாக்கம் இருப்பது தாங்கள் அறிந்ததே. அப்படி இருக்கும்போது யாழ்ப்பாணம் நகர வர்த்கர்களை வர்த்தகம் செய்யவிடாது தடை விதித்து அவர்களைப் பாதிப்படையச் செய்திருப்பது கவலையளிக்கின்றது.

06. தமிழ் – சிங்களப் புத்தாண்டு வர இருக்கும் இவ்வேளையில் தாங்கள் ஏற்படுத்திய தடையானது வர்த்தகர்கள், உள்ளுர் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்கள், விவசாய உற்பத்திப் பொருட்களில் ஈடுபடுவோர் எனப் பல துறைசார்ந்த வர்த்தக நடவடிக்கைகளைப் பாரிய பாதிப்புக்களையும், பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

07. யாழ். நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகத்துறையை முடக்கிவிட்டு ஏனைய அதிகளவான மக்கள் கூடும் சில நிறுவனங்களுக்கு சகஜமாக செயற்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது எமது பகுதி வர்த்தகத்துறை பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் பாரபட்சமாக செய்யப்பட்டது என்று வர்த்தகர்கள் கருதுகின்றார்கள்.

08. பூட்டப்பட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் அங்கே தொழில் புரியும் தொழிலாளர்களுக்கான நிவாரணத்தையும் தொழில் இழப்புக்கான நட்ட ஈட்டையும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகவே, நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து எமக்கு நீதி வழங்குவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமையிலுருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்று தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், த. சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் வி.மணிவண்ணன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.