உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறதா? சண் தவராஜா

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்ற கையோடு, உலகில் மீண்டும் புதிய போர்கள் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டது. ஆயுத வியாபாரிகளின் ஆதரவு பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தனது எஜமானர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய தேவை உள்ள நிலையில் புதிய யுத்தங்கள் தவிர்க்கப்பட முடியாதவையாக உள்ளன.

கொரோனாக் கொள்ளை நோயினால் உலகம் மிகப் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ள இன்றைய சூழலில் எதிர்பார்க்கப்பட்ட யுத்தங்கள் தாமதமாகக் கூடும் என்ற நம்பிக்கை சிறிதளவு இருந்தது. ஆனால், நடப்பு நிகழ்வுகள் அத்தகைய சிறிய நம்பிக்கையைக் கூடத் தகர்ப்பனவாக உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் உலகம் மிகவும் அமைதியாக உள்ளது போன்று தோற்றமளித்தாலும் உலகின் பல பகுதிகளிலும் ஆயுத மோதல்கள் இடம்பெறவே செய்கின்றன. கொள்ளை நோய்க்குப் பலியாகும் மக்களின் எண்ணிக்கையளவில் இல்லாது விட்டாலும் தினமும் நூற்றுக் கணக்கானோர் ஆயுத மோதல்களில் பலியாகிக் கொண்டே இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், யேமன், ஈராக், சிரியா, பாலஸ்தீனம், சூடான், லிபியா, சோமாலியா, எதியோப்பியா, ஆபிரிக்கக் கண்டத்தின் ஏனைய பல நாடுகள் என மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உயிர் அழிவுகளும், சொத்தழிவுகளும், இடப் பெயர்வுகளும் இடையறாது நிகழ்ந்த வண்ணமேயே உள்ளன.

அதேவேளை, புதிய ஆயுத மோதல்களுக்கான களங்களைத் திறப்பதற்கான எத்தனங்களும் மேற்கொள்ளப்பட்ட வண்ணமேயே உள்ளன. செங்கடலில் தரித்து நின்ற ஈரான் நாட்டு படைக் கப்பல் ஒன்று இஸ்ரேலிய கண்ணிவெடித் தாக்குதலில் சேதமடைந்த செய்தி கடந்த வாரம் எம்மை வந்தடைந்துள்ளது. இதற்கான பதிலடி என்னவாக இருக்கும் என்பது அடுத்துவரும் நாட்களில் தெரிய வரலாம்.

மறுபுறம், ஜோ பைடன் ஆட்சி ஆரம்பமான நாளில் இருந்து சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் போர் மூளக் கூடும் என்ற செய்திகள் மேற்குலக ஊடகங்களில் இடம்பிடித்து வருகின்றன.

பென்னம்பெரிய சீனாவுக்கும் குட்டித் தாய்வானுக்கும் இடையில் யுத்தம் ஒன்று மூளுமானால் ஓரிரு நாட்களிலேயே தாய்வான் சீனாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடக் கூடும் என்பதே யதார்த்தமாக இருந்தாலும், தாய்வானைக் கொம்பு சீவி விடுவதிலும், உங்களைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என வாக்குறுதி வழங்குவதிலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

அரசியல் காரணங்களால் பிரிந்து, இரண்டு தனிப்பட்ட நாடுகளாக நீடித்து வருகின்ற சீனாவிலும் தாய்வானிலும் வாழ்பவர்கள் யாவரும் சீன மக்களே என்பதுவும், தாய்வான் என்ற நாடு சீனாவின் ஒரு பகுதியாகவே இன்றும் உத்தியோகபூர்வமாகக் கருதப்படுகின்றது என்பதுவும் பெரும்பாலான மக்கள் அறியாத உண்மைகள்.

இதேவேளை, ஐரோப்பாவின் ஒரு பகுதியான உக்ரைனிலும் புதிதாக போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. ரஸ்யாவின் எல்லையில் அமைந்துள்ள நாடு உக்ரைன்.

சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக விளங்கிய உக்ரைன், இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிப் படைகளின் கைகளில் பேரழிவைச் சந்தித்திருந்தது. அதேவேளை, ஸ்ராலின் தலைமையிலான செஞ்சேனை பல முனைகளிலும் முன்னேறி, பேர்லினைக் கைப்பற்றிய படை நடவடிக்கைகளில் மிகவும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கிய நாடாகவும் விளங்கியது. 1991 இல் சோவியத் ஒன்றியம் சிதறிய போது தனி நாடாக மாறிய உக்ரைன் தொடர்ந்து ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து படிப்படியாக விலகத் தொடங்கியது.

சோவியத் ஒன்றியம் பொதுவுடமைத் தத்துவத்தைக் கைவிட்டு, மேற்குலக பாணியிலான முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய போதில், சோவியத் ஒன்றியத்தின் தலைமை நாடாக விளங்கிய ரஸ்ய அரசியல் தலைமையிடம் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும், அச்சங்களும் நிலவின. பகை முகாம்களாக விளங்கிய அமெரிக்க தலைமையிலான மேற்குலகிற்கும், ரஸ்ய தலைமையிலான பொதுவுடமை முகாமிற்கும் இடையிலான பனிப்போர் முடிவிற்கு வந்த போதில் ரஸ்யாவிற்கு மேற்குலகம் பல உறுதிமொழிகளை வழங்கியது.

அதில் ஒன்று நேட்டோ எனப்படும் வடக்கு அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் என்ற இராணுவக் கூட்டணியில், முன்னாள் சோவியத் ஒன்றியக் குடியரசில் இடம்பெற்றிருந்த நாடுகளை இணைத்துக் கொள்வதில்லை என்பது. ஆனால், வெகு விரைவிலேயே இந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டது.

போலந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் 1999 ஆம் ஆண்டில் நேட்டோ கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டன. பல்கேரியா, லற்வியா, எஸ்தோனியா, லித்துவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 2004 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டன. தொடர்ந்து அல்பேனியா மற்றும் குரோசியா ஆகிய நாடுகள் 2009 ஆம் ஆண்டிலும் மென்ரேநேக்ரோ 2017 ஆம் ஆண்டிலும் வடக்கு மசிடோனியா 2020 மார்ச் 27 ஆம் திகதியும் நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டன. அத்தோடு பொஸ்னியா மற்றும் ஹேர்ஸகோவினா, ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியவை நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டுக் காத்திருக்கின்றன.

அமெரிக்காவும் 11 ஐரோப்பிய நாடுகளும் இணைந்து 1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பை உருவாக்கின. அப்போதைய நிலையில் உலகின் மிகப் பாரிய படைக் கட்டமைப்பைக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்ளும் நோக்குடனேயே நேட்டோ உருவாக்கப்பட்டது. யதார்த்தத்தில் 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறிப்போன கையோடு அந்தக் கட்டமைப்பின் அவசியம் முடிந்து போகின்றது. ஆனால், தனது இராணுவ மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்குடன் அமெரிக்கா இந்தக் கட்டமைப்பைப் பேணிப் பாதுகாத்து வருவதோடு மட்டுமன்றி, அந்தக் கட்டமைப்பை மேலும் விரிவாக்கவும் பல வழிகளிலும் முயன்று வருகின்றது.

மிகையில் கோர்பச்சோ தலைமையிலான சோவியத் ஒன்றியம் 1991 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட போதும், அதன் பின்னான காலகட்டத்தில் போரிஸ் யெல்ற்சின் நேரடித் தேர்தலில் வெற்றிபெற்று அரசுத் தலைவராகப் பதவியேற்ற பின்னான காலகட்டத்திலும் ரஸ்யா மிகப் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. 1999 டிசம்பர் 31 ஆம் திகதி யெல்ற்சின் தனது பதவியைத் துறந்து அப்போதைய தலைமை அமைச்சராக இருந்த, தற்போதைய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டினிடம் தனது பதவியைக் கையளித்தார்.

1991 முதல் 1999 வரையான இந்தக் காலகட்டத்தில் ரஸ்யா வல்லரசு என்ற தனது வகிபாகத்தை இழந்தது. ‘மதுவுக்கு அடிமையான ஒரு அரசுத் தலைவர்’ என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்ட போதிலும், தனது பதவிக் காலத்தில் இறுதியில் ஒரு சிறந்த முடிவை எடுத்து வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டார் யெல்ற்சின். புட்டினின் கைகளில் நாட்டின் பொறுப்பை ஒப்படைத்தன் வாயிலாக – சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்னர் – ரஸ்யா உலக வரைபடத்தில் இருந்து மறைந்து போகும் என்ற மேற்குலகின் கனவு பொடிப்பொடியாகிப் போனது.

மறுபுறம், புட்டின் தலைமையில் ரஸ்யா மீண்டும் வல்லரசு என்னும் தகுதியை விரைவிலேயே எட்டிப் பிடித்தது. முன்னாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவில் வளைத்துப் போடும் முயற்சியில் மேற்குலகம் – தனது பழைய வாக்குறுதியையும் மறந்து – ஈடுபட முக்கிய காரணங்களுள் ஒன்றாக ரஸ்யாவின் துரித பல்துறை வளர்ச்சியும் காரணமாகியது.

தனது முன்னாள் குடியரசு நாடுகளை, தனது எல்லையோர நாடுகளை நேட்டோவில் இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான கண்டனங்களையும், ஆட்சேபனைகளையும் ரஸ்யா பதிவுசெய்து வருகின்ற போதிலும் அதனைச் சட்டைசெய்யாத போக்கையே மேற்குலகம் கடைப்பிடித்து வருகின்றது. இதன் விளைவாக மேலும் மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒரு மனோநிலைக்கு ரஸ்யாவைத் தள்ளுவதன் ஊடாக ஒரு ஆயுதப் போட்டாபோட்டிக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

இத்தகைய ஒரு போட்டியின் மையப்புள்ளியாக தற்போது உக்ரைன் மாறியுள்ளது. அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு பாரிய ஆயுத மோதலுக்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகக் கட்டியம் கூறி நிற்கின்றன.

2014 ஆம் ஆண்டில் ஒரு சதிப் புரட்சியின் விளைவாக பெற்றோ புரஷென்கோ அவர்களின் ஆட்சி கலைக்கப்படும் வரையான காலப்பகுதியில் அணிசேராக் கொள்கையுடனேயே உக்ரைன் இயங்கி வந்தது.

மேற்குலகின் ஆதரவு பெற்ற சதிப் புரட்சியூடான ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவான அரசாங்கம் வெகுவாக மேற்குலகின் பக்கம் சாயத் தொடங்கியது. 2019 அம் ஆண்டு பெப்ரவரியில் அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம், உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோவிலும் இணைப்பதற்கான ஆணையை உத்தியோகபூர்வமாக வழங்கியது.

உக்ரைன் நாட்டின் தற்போதைய அரசுத் தலைவரான வொலோடிமிர் ஸெலன்ஸ்கி 2019 ஆம் ஆண்டில் நடாத்திய தேர்தல் பரப்புரைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பது குறித்துப் பேசினாரே ஒழிய, நேட்டோவில் இணைவது குறித்து வாயே திறக்கவில்லை. ஆனால், தற்போது உக்ரைனை எப்படியாவது நேட்டோவில் இணைத்துவிடத் துடியாய்த் துடிக்கிறார்.

ஸெலன்ஸ்கியின் நோக்கம் நேட்டோவில் இணைவதன் ஊடாகத் தனது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவது அல்ல. மாறாக, தனது அண்டைநாடான ரஸ்யாவைப் பழிதீர்த்துக் கொள்வதே. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சதிப்புரட்சிக்கு பின்னான காலப்பகுதியில் ரஸ்ய நாட்டின் எல்லையோரமாக உள்ள டொன்பாஸ் பிராந்தியத்தில் உருவான ஆயுத மோதல்கள், அதன் விளைவாக ரஸ்ய மொழிபேசும் மக்கள் அதிகமாக வாழும் அந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தொடர்ந்தும் அவற்றைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை, குறிப்பாக கிரீமிய தீபகற்பத்தில் நடாத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பின் பின்னர் அந்தப் பிரதேசம் ரஸ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டமை ஆகியவற்றுக்குப் பழிவாங்கும் எண்ணமே விளைவுகள் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ரஸ்யாவுடனான போருக்கான ஏதுநிலையை உருவாக்கிட அவரைத் தூண்டுகிறது. தான் இழந்த நிலப்பகுதியை மேற்குலகின் உதவியுடன் வல்வந்தமாக மீளப்பெற உக்ரைன் துடிக்கிறது.

ரஸ்யாவுடனான போர் என்பது உக்ரைனைப் பொறுத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பது அதன் போர்வெறிக்குத் தூபமிடும் மேற்குலகிற்குத் தெரியாத விடயமல்ல. போர் ஒன்று ஏற்பட்டால் ரஸ்யா அதனை எந்த வகையில் எதிர்கொள்ளும்? அதன் தந்திரோபாயங்கள் எவ்வாறு அமையும்? இரகசிய ஆயுதங்கள் எதனையாவது ரஸ்யா பயன்படுத்துகின்றதா? போன்ற விடயங்களைத் தெரிந்து கொள்ள மேற்குலகம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். அது மாத்திரமன்றி, இரண்டாம் உலக யுத்தத்தின் போது அணு ஆயுதங்களைப் பரீட்சித்துப் பார்த்ததைப் போன்று, தன்னிடம் உள்ள நவீன ஆயுதங்கள் எதனையாவது பரீட்சித்துப் பார்க்கும் களமாகவும் உக்ரைனைப் பயன்படுத்த முனையலாம். தனது நலன்களைப் பாதுகாக்கின்றோம், நண்பர்களுக்கு உதவுகின்றோம் என்ற போர்வையில் மேற்குலகின் படைகள் உக்ரைனில் கால்பதித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அணு ஆயுத வல்லரசான ரஸ்யாவுடனான ஒரு பாரிய மோதல் என்பது உலகில் ஒரு அணு ஆயுதப் பிரயோகத்திற்கு வித்திடக் கூடும், சில வேளைகளில், மூன்றாம் உலகப் போருக்குக் கூட அது வழி சமைக்கலாம் என்ற சிந்தனை, அதனால் உருவாகக் கூடிய பேரழிவு தொடர்பான அச்சம் மேற்குலகிடம் இருப்பதாகத் தெரியவில்லை. “தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப்பிழையாக அமைய வேண்டும். அதுவே பிரதானம்” என்ற போக்கில் உக்ரைனைப் பலி கொடுத்தாவது தனது நலன்களை வென்றெடுக்க வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் இலக்காக உள்ளது. அதற்கான பலிக்கடாவாக உக்ரைன் விளங்க இருக்கின்றது.

ஆட்சியாளர்களின் முடிவுகள் நல்லதாக அமைந்தால் நன்மை அடைவதும், தீமையாக அமைந்தால் பாதிப்பை எதிர்கொள்வதும் வெகுமக்களே. நாசி யேர்மனி கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளையும் கைப்பற்றி தனது பொம்மை ஆட்சியாளர்களைப் பதவியில் அமர்த்திய காலகட்டங்களிலும் மக்களின் ஒரு சாரார் அவர்களை ஆதரிக்கவே செய்தனர். ஆனால், உண்மையான தேசபக்தி மிக்க மக்களின் எழுச்சி பின்னாளில் அத்தகைய ஆட்சியாளர்களை மண்கவ்வச் செய்ததையும், அவர்களின் வரலாறுளை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததையும் உலகம் அறியும். இன்று ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருப்பதால் ஸெலன்ஸ்கி போன்றவர்கள் ரஸ்யாவுடன் போர் தொடுக்கும் எண்ணம் கொண்டு செயற்படுவதை, காலங்காலமாக ரஸ்யாவுடன் மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்ட உக்ரைன் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பது அறிவிழிவு.

வரலாற்றுச் சக்கரங்கள் ஒருநாளும் பின்னோக்கிச் சுழல்வதில்லை. அதுவே உண்மையான வரலாறு.

Leave A Reply

Your email address will not be published.