கனவிலும் கிடைக்காது சமஷ்டி! – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு.

“புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு பேரழிவைச் சந்தித்தது என்றும், புதிய அரசமைப்பில் சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்சு இந்த ஆட்சியில் இடமில்லை.

இந்த முறைமைகள் புதிய அரசமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது.

நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம்தான் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

புதிய அரசமைப்பில் இது தொடர்பில் தெளிவாகப் குறிப்பிடப்படும்.

ஒற்றையாட்சி முறைமையால் இந்த நாடு பேரழிவுகளைச் சந்திக்கவில்லை. பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவைத் தவிடிபொடியாக்கினோம். அவர்களை இல்லாதொழித்தோம்.

சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமைதான் பிரிவினைக்கு வழிவகுக்கும். அது நாட்டைப் பிளவுபடுத்தும்; நாட்டின் நல்லிணக்கத்துக்குப் பாதகமாக அமையும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.