ஈஸ்டர் சூத்திரதாரிகளின் விவரம் வெளியிட்டமை எமது வாயை மௌனிக்க வைப்பதற்கான அறிவிப்பாக இருக்கக் கூடாது! அரசுக்கு பேராயர் எச்சரிக்கை.

“எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் – குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்காக, ஒரு சிலரின் பெயர்களைப் பிரதான குற்றவாளிகள் என்று அரசு அறிவிக்கக் கூடாது.”

இவ்வாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று நௌபர் மௌலவியின் பெயரை அரசு அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே பேராயர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஈஸ்டர் தாக்குதல் இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் சவால் விடுப்பதாக அமைந்திருந்தது. கொழும்பிலுள்ள நட்டசத்திர விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள்கூட ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். இது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்த நிலையில் குற்றவாளிகளைத் தண்டிக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தேன். அரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருக்கின்றேன்.

இதையடுத்து ஒரு சிலரின் பெயர்களை பிரதான குற்றவாளிகள் என்று அரசு அறியப்படுத்தியுள்ளது. இது எமது வாயை அடைக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது. ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான, நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக தகுதி தராதரம் பாராது உடன் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எவரையும் அரசு தப்ப விடக் கூடாது.

அரசும் எதிரணியும், இந்தத் தாக்குதலை தத்தமது அரசியல் பரப்புரைகளுக்கும் எதிர்வரும் தேர்தல் பரப்புரைக்கும் தற்போது பயன்படுத்துவதை உடன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அரசும், எதிரணியும் ஓரணியில் செயற்படவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.