மே மாதத்தில் கொரோனாவின் 3ஆவது அலை:எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் இலங்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்றத் தவறியுள்ள நிலையில், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ளது எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சுகாதார பரிசோதகர் சங்கத்தால் பல முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் அதனைப் பொருட்படுத்தாது தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மே மாதத்திலிருந்து தோன்றும் புதிய கொரோனாக் கொத்தணிகளைச் சமாளிக்க அதிகாரிகள் இப்போதிருந்தே மருத்துவமனைகளைத் தயார் செய்ய வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திருமதி இலங்கை சர்ச்சை, சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் நஞ்சுப் பொருள் அடங்கிய எண்ணெய்ப் பிரச்சினை ஆகியவற்றின் பின்னணியில் அதிகரித்து வரும் மிகத் தீவிரமான கொரோனா வைரஸ் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது எனவும் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக கொரோனா வைரஸ் தற்போது இல்லை என்ற எண்ணத்தில் பொதுமக்களும் செயற்படுகின்றனர் எனவும், ஏற்கனவே கொரோனா குறித்து மக்களிடம் இருந்த அச்சத்தை மீண்டும் ஏற்படுத்துவது கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மூன்றாவது அலை நம்மைத் தாக்கும்போது மட்டுமே இது எவ்வளவு தீவிரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

எனினும், இப்போது காலம் கடந்துவிட்டது. ஏற்படப் போகும் விளைவுகளைச் சந்தித்து அதைச் சமாளிக்கத் தயாராக வேண்டும். அத்தோடு இந்த நிலைமைக்குப் பொதுமக்களும் அதிகாரிகளுமே பொறுப்பு.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனாவிலிருந்து நூறு சதவீத பாதுகாப்பு கிடைக்கின்றது என மக்கள் கருதுகின்றார்கள். ஆனால், உலக நாடுகளில் பெரும்பாலானவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட போதிலும் 3ஆவது மற்றும் 4ஆவது அலைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக புதிய பூட்டுதல்கள் செயற்படுத்தப்படுகின்றன என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.