மஹிந்த தெளிவுடன் செயற்பட வேண்டும்! ‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் குறித்து கரு ‘ருவிட்’.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய,

“கொழும்புத் துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்குப் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். ஓர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.”

– இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

அரசால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கொழும்புத் துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

இது குறித்து கரு ஜயசூரிய அவரது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

“சில சட்டமூலங்கள் தொடர்பில் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஆராயப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை முறைகேடான விதத்தில் பயன்படுத்தி தேசிய ரீதியில் மிகவும் முக்கியமான சட்டமூலங்கள் மற்றும் யோசனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

கொழும்புத் துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் போதியளவு கால அவகாசத்தை வழங்குவது முக்கியமானதாகும்.

அதேபோன்று மறுபுறம் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென்பது நீதித்துறையை குறைமதிப்பீடு செய்வதற்கு வழிவகுக்கும்.

இவற்றுக்கு மத்தியில் ஓர் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெளிவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்” – என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.