தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் இன்று (12) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கப்பட்டது.

இம்முறை தேசிய வெசாக் தினத்தை வட மாகாணத்திலுள்ள வரலாற்று சிறப்புமிகுந்த நயினாதீவு ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்தப்படவிருந்தது.

அதன்படி, வரலாற்று சிறப்புமிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த விகாரைகளின் ஓவியங்கள் இந்த ஆண்டு தேசிய வெசாக் தின நினைவு முத்திரைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சபுமல்கஸ்கட விகாரை, யாழ்ப்பாணம் கதுறுகொட விகாரை மற்றும் வவுனியா கமடுகந்த தலதா விகாரை ஆகியவற்றை மையமாகக் கொண்டு முத்திரை வடிவமைப்பாளர் பாலிதா குணசிங்க அவர்கள் இந்த நினைவு முத்திரைகளை வடிவமைத்துள்ளார்.

ரூபாய் பத்து, ரூபாய் பதினைந்து மற்றும் ரூபாய் நாற்பத்து ஐந்து ஆகிய மதிப்பிலான மூன்று முத்திரைகள் இதன்போது வெளியிடப்பட்டன.

குறித்த நிகழ்வில், கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும, புத்தசாசன அமைச்சின் பணிப்பாளர் சம்பிகா கனேறு, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave A Reply

Your email address will not be published.