சேதன உரங்களின் பயன்பாடு, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைக்காக என ஜனாதிபதி தெரிவிப்பு.

சேதன உரங்களை பயன்படுத்துவது ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையொன்றை கட்டியெழுப்புவதற்காகவாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். முந்தைய அரசாங்கங்கள் சேதன உரப் பயன்பாட்டை பிரபலப்படுத்த முயற்சித்த போதும் அதைத் தொடர்ச்சியாக பேண முடியவில்லை. இது ஒரு சவாலான கடினமான பணி; எனினும் சரியான மூலோபாயத்தை அடையாளம் கண்டு நாட்டுக்காக கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
‘காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் ஒரு பசுமை இலங்கையை உருவாக்குதல்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

சேதன உரங்களைப் பயன்படுத்துவதால் விளைச்சல் குறைந்து வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டால் உத்தரவாத விலையை விட அதிக தொகைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், விவசாயிகள் அதற்கு பயப்படத் தேவையில்லை என்றும், நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள விலையில் அரிசியை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்..
இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் சேதன உரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் அதற்குத் தேவையான வசதிகளை வழங்க அரசு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை காப்பாற்றுவதில் சில போர் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் பயங்கரவாதத்தை தோற்கடித்து, நாட்டை வெற்றிபெறச் செய்தது போன்று அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான உரிமையை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அறுபதுகளின் முற்பகுதியிலிருந்து இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பழக்கமாகிவிட்ட இலங்கை விவசாயத் துறையை சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு பழக்குவது நாட்டை யுத்தத்திலிருந்து காப்பாற்றுவதைப் போன்று மக்களுக்கு கிடைத்த விசேட வெற்றியாகும் என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.