இஸ்ரேல் – காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள்

இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடந்து வருவதால், அந்த மோதல் முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 1,000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை கடந்த 38 மணி நேரத்தில் பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர்.

அதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையன்று காசா பகுதியில் உள்ள இரண்டு கோபுரங்களை தகர்த்துள்ள இஸ்ரேலிய ராணுவம், நூற்றுக்கணக்கான வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் குறைந்தபட்சம் 43 பாலத்தீனர்கள், ஆறு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 13 பாலத்தீன சிறார்களும் அடங்குவர்.

இந்த நிலையில், நடந்து வரும் மோதல்களுக்கு தமது மிகப்பெரிய கவலையை வெளியிட்டிருக்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ்.

சமீபத்திய தாக்குதலின்போது வடக்கு காசா பகுதியில் இருந்து பீரங்கி எதிர்ப்பு டாங்கியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை எல்லையில் உள்ள ஜீப்பை தாக்கியது. அதில் ஒரு இஸ்ரேலிய நபர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காயம் அடைந்தனர்.

காசா பகுதியில் வீதியெங்கும் கட்டடங்களின் இடிபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. பல கட்டடங்கள் நொறுங்கி தரைமட்டமாகியுள்ளன. இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஏராளமான கார்கள் உருக்குலைந்துள்ளன.

அங்கு தீவிரமாகும் மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய நகரங்களில் இஸ்ரேலிய அரபுகள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாகியதால் டெல் அவிவ் நகருக்கு அருகே உள்ள லோத் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்களை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசாவில் உள்ள தீவிரவாதிகளை நோக்கி நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஏவிய 90% ராக்கெட்டுகளை நடுவானில் இடைமறித்து அழித்து விட்டோம் என்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெருசலேமில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு தரப்பினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

பாலத்தீன ஹமாஸ் போராளி குழுவைச் சேர்ந்தவர்கள் டெல் அவிவ் மற்றும் பிற பகுதிகளை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுவரை இஸ்ரேல் தரப்பில் மூவரும் பாலத்தீன தரப்பில் 28 பேரும் கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் அமைப்பு எல்லையை மீறி விட்டது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால் இஸ்ரேலின் ஆதிக்கம் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை பாதுகாப்பதற்காகவே தாங்கள் இவ்வாறு செயல்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

2017ஆம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் மோசமான வன்முறையை ஜெருசலேம் நகரம் தற்போது சந்தித்து வருகிறது.

– BBC

Leave A Reply

Your email address will not be published.