வெளிநாடுகளிலிருந்து வந்தோராலேயே இந்திய, பிரிட்டன் வைரஸ் இலங்கையில் பரவல்!

இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள இந்தியா மற்றும் பிரிட்டனின் கொரோனா வைரஸின் புதிய திரிபானது வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மூலமே பரவியுள்ளதால் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்று தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நாட்டில் தினமும் அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர். தற்போதைய சூழலில் தினமும் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போது பதிவாகும் நோயாளர்களையும்விட அதிகமானவர்கள் எதிர்காலத்தில் பதிவாகக்கூடும்.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய திரிபானது வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் மூலமே இலங்கையில் பரவியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய திரிபானது இந்தியாவிலிருந்து வந்த இந்தியப் பிரஜை ஒருவரின் ஊடாகவே பரவியுள்ளது. அவருடைய உடலிலிருந்தே இங்குள்ளவர்களுக்குப் பரவியுள்ளதைக் கண்டறிந்துள்ளோம்.

ஆகவே, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கடந்த காலத்தைக் காட்டிலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசு, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்களுக்குக் கடுமையான தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவர். வருபர்கள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.