2025இல் அனைத்து குடிமக்களுக்கும் குடிநீர் கிடைக்கும்! – பிரதமர் மஹிந்த உறுதி.

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் மூன்று திட்டங்களை இணையவழியில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ நீர் வழங்கல் திட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியன பொதுமக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன.

குருநாகல், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 377 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நன்மையடைகின்றனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தூய்மையான குடிநீர் இல்லாததால் வட மேல் மாகாண மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், குறித்த பிரச்சினை ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகின்றது எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.