மாணவனைக் கடத்தி தாக்கிய குழு கைது! முக்கிய சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் இருவருக்கு வலைவீச்சு.

பாடசாலை மாணவனைக் கடத்திச் சென்று ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் வைத்து கடுமையாகத் தாக்கிவிட்டு நடுவீதியில் கைவிட்டுச் சென்ற மூவரை யாழ். குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைதுசெய்தனர்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள யாழ். ஆஸ்பத்திரி வீதியில் வைத்து பாடசாலை மாணவன் ஒருவரை ஐவர் அடங்கிய குழுவினர் கடந்த 5ஆம் திகதி கடத்திச் சென்றனர்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட மாணவனை நல்லூர் பகுதியிலுள்ள ஆள்நடமாட்டம் அற்ற வீடு ஒன்றுக்குள் கொண்டு சென்று குறித்த குழுவினர் கடுமையாகத் தாக்கினர்.

மயக்கமுற்ற மாணவனை அரியாலைப் பகுதியிலுள்ள வீதி ஒன்றில் அவர்கள் வீசிவிட்டுச் சென்றனர்.

தன்னைக் கடத்தியவர்கள் யார் என்று மாணவனுக்குத் தெரியாத நிலையில் இது குறித்து யாழ். பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், குறித்த மாணவன் கடத்தப்பட்ட தருணம் அப்பகுதியில் நின்றிருந்த பிறிதொரு நபர் கைத்தொலைபேசியில் வீடியோ படம் எடுத்துள்ளார். இதில் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரின் இலக்கம் மற்றும் கடத்திய நபர்களின் முகம் என்பன பதியப்பட்ட நிலையில் குறித்த வீடியோ பதிவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த கார் யாழ். அரசடிப் பகுதியில் மீட்கப்பட்டதுடன் காரின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கமையவும் வீடியோ பதிவுகளின்படியும் யாழ். அரசடி மற்றும் யாழ். நகரப் பகுதியில் மேலும் இருவர் இன்று கைதுசெய்யப்பட்டனர்

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி உட்பட இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.