ஊடகவியலாளரின் புகைப்படத்தால் இடப் பாற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதால் நாட்டில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளால் நோயாளிகளின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அரச மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்ட ஒரு ஊடகவியலாளர், அங்குள்ள கொரோனா நோயாளிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில வெளியிட்டதை அடுத்து அந்தப் புகைப்படம் வைரலாகப் பரவியது.

குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாணந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு படுக்கைகளின் பற்றாக்குறை இருந்ததால் ஊடகவியலாளர் தரையில் உட்கார வேண்டியிருந்தது. அத்துடன் பெரும்பாலான படுக்கைகளுக்கு இடையில் அல்லது தரையில் பாய்கள் மற்றும் மெத்தைகளில் நோயாளிகள் தூங்குவதை அவதானிக்க முடிந்தது.

இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன் ருவிட்டரில் விவாதிக்கப்பட்டபோது, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதாகக் கூறியிருந்ததுடன், அந்த நோயாளிகளுக்கு சில படுக்கைகளை ஏற்பாடு செய்ய முடியும் என்பதில் தான் உறுதியாக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து குறித்த ஊடகவியலாளர் மதுகமவில் உள்ள ஒரு வசதிகூடிய கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், பாணந்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதிகளவான நோயாளிகள் படுக்கைகள் இல்லாமல் இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பாணந்துறை மருத்துவமனையின் பணிப்பாளர் இந்திரானி கொடகன்த கருத்துத் தெரிவிக்கையில்,

“மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்குப் புதிய படுக்கைகளைப் பெறுவது குறித்து நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை” என்றார்.

எது எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தையடுத்து அரச மருத்துவமனைகளில் உள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, கொரோனா நோயாளிகளைகி கையாளும் மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவையான நிதி குறித்து சுகாதார அமைச்சருக்கும், திறைசேரிக்கும் இடையில் பேச்சு மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.