யாருக்கும் கிடைக்கக் கூடாத , மட்டக்களப்பு மண் வழங்கிய பரிசு : சண் தவராஜா

நெல்லை நடேஸ் என்ற பெயரில் இலக்கிய உலகில் பிரவேசித்த ஆசிரியரான ஐயாத்துரை நடேசன் பின்னாளில் ஜி.நடேசன் என்ற பெயரில் ஊடகராக மாறி, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிப் போனான். அக்டோபர் 1979 இல் தேன்கூடு என்ற பெயரிலான சஞ்சிகையைத் தொடங்கிய நடேசன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தான். “…எம்மைப் பொறுத்தவரை இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயந்தான் குறிக்கோள்…”

ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் படைக்க நினைத்த ஊடகப் போராளி எம்மிடமிருந்து பறிக்கப்பட்டு மே 31ஆம் திகதியுடன் 17 வருடங்களாகின்றன. மறக்க முடியாத, மறக்கக் கூடாத நண்பனின் நினைவுப் பகிர்வு இது.

17 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று நினைத்தாலும் துயரம் நெஞ்சைப் பிசைகிறது. பிறப்பும், இறப்பும் இயற்கைதானே? இதில் 17 வருடங்கள் கடந்தும் மறக்காமல் போவதற்கு என்ன இருக்கிறது? எனச் சிலர் கேட்கக்கூடும். அவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. ஆனாலும், யதார்த்தம் அதுவாகவே இருக்கிறது. இறந்து 17 வருடங்கள் கடந்த பின்பும் நடேசனின் நினைவுகளை மறக்க முடியவில்லை.

இது எதனால் நிகழ்கிறது? பழகிய நாட்கள் பசுமை நிறைந்தவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வை முன்வைக்கும் காலத்தினால், நடேசனின் நினைவில் இருந்து விடபடச் செய்ய முடியவில்லையா?

ஒரு நண்பனாக, தோழனாக நடேசனோடு பழகிய காலங்கள் விசேடமானவை எனக் கூறிவிட முடியாது. அது பணியாற்றும் இடங்களில் அனைவருக்கும் வாய்க்கும் அனுபவங்களே அவை. ஆனால், நடேசனின் கனவுகளைக் காவிச் செல்லும் பலருள் ஒருவனாக, அவனது வழித்தடத்தில் பயணிக்கும் பலருள் ஒருவனாக அன்றாட வாழ்வில் நடேசனின் மனப்பதிவுகள் ஆழமானவையாகவே தொடர்கின்றன. செய்திகளின் தேடலாகட்டும், செய்திகளைப் பெறுவதற்காக உருவாக்கிக் கொள்ளும் உறவுகளாகட்டும், அத்தகைய உறவுகளைப் பேணுவதில் காட்டும் சிரத்தையாகட்டும், பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சம் உள்ள காலங்களில் தானே செய்திகளை உருவாக்கி அவற்றைப் பரபரப்பாக மாற்றுவதாகட்டும் நடேசனிடம் கற்றுக்கொள்ள அநேக விடயங்கள் இருந்தன. நடேசனைப் பொறுத்தவரை தான் எழுதும் ஒவ்வொரு செய்தியும், முதற்பக்கத்தில் இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பேராசை இருந்தது. அவ்வாறு முதற்பக்கத்தில், அதிலும் தலைப்புச் செய்தியாக தனது செய்தி அமைந்துவிட்டால் நடேசன் அடையும் ஆனந்தத்திற்கும், பெருமிதத்துக்கும் அளவே இல்லை. முதல்தடவையாக வெற்றிபெறும் ஒருவனின் மனோநிலையே அவரது செய்திகளை தலைப்புச் செய்தியாகப் பார்க்கும்போது அவனுக்கு இருந்தது.

கட்டுரைகளின் கதை தனியானது. அவன் வீரகேசரி வாரவெளியீட்டில் கட்டுரை எழுதும் வாய்ப்புப் பெற்றதே ஒரு தனிக்கதை. கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டிருந்த பத்திரிகைகள் யாவும் பிராந்தியங்களையும், பிராந்தியச் செய்தியாளர்களையும் இரண்டாம் பட்சமாகக் கருதியே செயற்பட்டுவந்ததொரு காலம் இருந்தது. ஈழப் போர் விரிவடைந்து, பிராந்தியங்கள் செய்திச் சுரங்கங்களாக மாறத் தொடங்கியதன் பிற்பாடே வடக்கிலும் கிழக்கிலும் பணியாற்றிவந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு தனியான கணிப்பு ஏற்பட்டது. அவர்களும் வார இறுதிப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்புகளைப் பெற்றார்கள்.

அதேவேளை, தேசியப் பத்திரிகைகளில் பணியாற்றிவந்த ஊடகர்களில் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சொந்த இடங்களாகக் கொண்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த மாவட்டங்கள் தொடர்பாக வாராந்தக் கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வாறுதான், வீரகேசரி பத்திரிகையில் நண்பன் ‘கிண்ணையடி’ எஸ்.பாண்டியன் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வந்தான். நடேசன் உள்ளிட்டோரின் நண்பனாக இருந்துவந்த இவன் ஒரு கட்டத்தில் கட்டுரை எழுதும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டான். இத்தகைய ஒரு சூழலில், கட்டுரை எழுதும்படியான கோரிக்கை நடேசனிடம் முன்வைக்கப்பட்டது. தனது நண்பனிடம் இருந்து பறிக்கப்பட்ட வாய்ப்பை தான் பற்றிக் கொள்வதா என்ற தார்மீக அடிப்படையிலான கேள்வி நடேசன் முன் தாண்டவமாடியது. அதேவேளை, தான் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த அரிய வாய்ப்பு இது. இருந்தும், தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் பாண்டியன் கோபித்துக் கொள்வானோ என்ற நியாயமான அச்சம் வேறு. என்னைப் போன்றோரிடம், கருத்துக் கேட்டபோதில் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் திடமாகவே நடேசனிடம் சொன்னேன். ‘வாய்ப்புகள் இரண்டாவது தடவையும் வாசல் கதவைத் தட்டாது’ என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன் நான். எனவே, நடேசனுக்குக் கிடைத்த வாய்ப்பு இன்னொருவருக்குப் போய்விடக் கூடாது என்ற எண்ணம் எண்ணிடம் இருந்தது. அது மட்டுமன்றி, நடேசனின் திறமை மேலும் எனக்கு நம்பிக்கை இருந்தது.

மிகுந்த தயக்கத்தின் மத்தியில் நடேசன் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுதத் தொடங்கியதும் எதிர்பார்த்த இரண்டு விடயங்கள் நடந்தேறின. பாண்டியனுக்கும் நடேசனுக்கும் இடையிலான நட்பு அன்றோடு முறிந்து போனது. மறுபக்கம், தனது கட்டுரை மூலம் நடேசன் தனது திறமையை நீரூபித்து இருந்தான். (எனக்கும் நடேசனுக்குமான நட்பு ஏற்படுவதற்கு மாத்திரமன்றி நான் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கவும் காரணமாக இருந்தவன் எனது பாடசாலை நண்பனான பாண்டியனே. ஆனாலும், ஒரு பிராந்தியப் பத்திரிகையாளனாக எனது ஆதரவு இறுதிவரை நடேசனுக்கே இருந்தது.)

இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட நடேசன் தனது கட்டுரைகளை மக்கள் நலன் என்ற விடயத்தில் இருந்தே படைத்தான். தான் பிறந்த இடத்தைப் பற்றிச் சிந்திக்காமல் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிச் சிந்தித்து, அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் மேன்மைக்காக நடேசன் பாடுபட்டான். எழுத்தில் மட்டுமன்றி, சொல்லிலும், செயலிலும் கூட அவன் பணி தொடர்ந்தது.

நான் நடேசனை முதன்முதலில் சந்தித்தது 1991 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன். இறுதியாக உயிரோடு சந்தித்த நாள் மே 30, 2004, அதாவது அவன் கொல்லப்படுவதற்கு முதல்நாள். மாலை 5 மணியளவில் எனது வீட்டிற்கு வந்திருந்தான். வரவேற்பு அறையில் அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் ஜெயானந்தமூர்த்தியின் மனைவி எங்கள் வீட்டிற்கு வந்தார். வரவேற்பு அறையில் இருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் நேரடியாக அவர் சமயலறைக்குச் சென்றுவிட்டார். சமையலறையில் இருந்த மனைவியின் அழைப்பைத் தொடர்ந்து நானும் அங்கே சென்றேன். அப்போது, என்னுடன் கூட அமர்ந்திருப்பது யார் என அவர் கேட்டார். வரவேற்பறையில் மாலை இருள் இருந்ததால் அவரால் நடேசனை அடையாளம்காண முடியவில்லை. நான் சொன்னதும், “அவருடைய முகத்தில் சவக்களை தென்படுகிறதே?” என்றார். அந்தத் தருணத்தில் அவரது வார்த்தையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், மறுநாள் நடேசன் கொலையான செய்தி கிடைத்தது முதல் அவரின் வார்த்தைகளே நினைவில் வந்துவந்து மனதைப் பிசைந்தன. ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே அறியும் திறன் அல்லது அறிவிக்கும் திறன் யாரிடமாவது இருக்குமா என்ற கேள்விக்கு அறிவியலில் விடையில்லை. ஆனாலும், இன்றுவரை அதனை மறக்க முடியவில்லை.

அன்பு, பாசம் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவே உணர முடியும். எம்மீது ஒருவர் அன்பு செலுத்தினால், பதிலுக்கு நாமும் அன்பு செலுத்த வேண்டும். ஒருவர் நம்மை நேசித்தால் நாமும் பதிலுக்கு அவரை நேசிக்க வேண்டும். குடும்பம், சமூகம் போன்றவை இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே உருவாகிச் செழிக்கின்றன.

தனது குடும்பத்திற்கு வெளியே நடேசன் அன்பு செலுத்திய இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்று, ஊடகப் பணி. இரண்டாவது, மட்டக்களப்பு மண்ணும், மக்களும். எப்போது பேசினாலும் இந்த விடயங்களைத் தாண்டி நடேசனின் சிந்தனைகள் இருந்ததில்லை. நடேசன் தான் வாழ்ந்த மண்ணை அளவுக்கு அதிகமாக நேசித்தான். அந்த மண்ணை அவன் எப்போதும் கைவிட்டதில்லை. ஆனால், அந்த மண்…? நடேசன் செலுத்திய அன்புக்குப் பதிலாக மட்டக்களப்பு மண் வழங்கிய பரிசு, யாருக்கும் கிடைக்கக் கூடாதது.

Leave A Reply

Your email address will not be published.