இந்தியா கோவிட்டை கட்டுப்படுத்தியதா, இல்லையா? – டுவிட்டரில் டிரெண்டிங்

கோவிட் இரண்டாவது அலையில் இந்தியா குறுகிய காலத்தில் விரைவாக மீண்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தி டிரெண்ட் ஆனது.

இந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை கடுமையாக வீசியது. லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர். மேலும் கடந்த முறையை காட்டிலும் இந்த முறை இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் ஆக்சிஜன் தேவையால் அவதிப்பட்டனர். தற்போது இந்த நிலை மாறி கோவிட் பாதிப்புகள் மெல்ல குறைய துவங்கி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு 4 லட்சமாக இருந்த சூழலில் இப்போது 1.3 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் ஆமதாபாத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‛‛நாட்டில் ஆக்சிஜன் தேவை ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்தது. இது அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய, மாநில அரசுகள் இந்த சவாலைச் சமாளிக்கும் பணிகளை எடுக்கத் தொடங்கின. கோவிட் முதல் அலைக்குப் பிறகு நாடு முழுவதும் 162 ஆக்சிஜன் ஆலைகள் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில், நாடு முழுவதும் சுமார் 300 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்து. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கோவிட் 2வது அலையில் இருந்து விரைவாகவே மீண்டு வந்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் கோவிட் குறைய தொடங்கி உள்ளது” என்றார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அமித்ஷாவின் இந்த பதிவை எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் விமர்சித்து டிரோல் செய்தனர். இதனால் இந்த விவகாரம் #Amit_Shah என்ற ஹேஷ்டாக்கில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

‛‛கடந்த ஒரு மாதம் அமித்ஷா எங்கு போனார். வீட்டிற்குள்ளே முடங்கி கொண்டாரா. இப்போது தான் வெளியில் தலைகாட்டி உள்ளார். மோடியும், அமித்ஷாவும் எப்போதும் பொய்யர்கள். வார்த்தைகளில் மட்டும் ஜாலம் காட்டுவர். மக்கள் எவ்வளவு துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சீக்கிரம் நோயை கட்டுப்படுத்தி விட்டோம் என கூறுகிறார்”. வெட்கப்படுகிறோம் அமைச்சரே…

‛‛கோவிட் இரண்டாவது அலையில் நாட்டு மக்கள் எந்தளவுக்கு அவதிப்பட்டனர் என அனைவரும் அறிவர். ஆயிரக்கணக்கான பேர் மடிந்தனர். ஆக்சிஜனுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எந்த நாட்டிலும் இப்படி ஒரு அவலம் நடந்திருக்காது. சுவாசிக்கும் காற்றை கூட விலைக்க வாங்க வேண்டிய சூழல் வந்தது. இப்போதும் நாட்டில் ஒரு நாள் பாதிப்பு லட்சத்திலும், இறப்புகள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகவும் உள்ளது. அப்படி இருக்கையில் கோவிட் இரண்டாவது அலையை விரைவாக நாங்கள் கட்டுப்படுத்தி விட்டோம் என அமித் ஷா கூறியிருப்பது முற்றிலும் அபத்தமானது”.

‛‛இதுவரை இறந்து போனவர்களுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்ல போகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டத்தை கூட்டி, நோயை அதிகப்படுத்திவிட்டு, நோயை கட்டுப்படுத்த தவறியதால் ஆயிரக்கணக்கான பேர் இறந்த பின்னர், இப்போது நாங்கள் விரைவாக இந்த நோயை குறைத்து விட்டோம் என மக்களிடம் அபத்தமாக பொய்யை எடுத்துரைக்கின்றனர்”.

‛‛கங்கை, யமுனை நதியில் எத்தனை உடல்கள் மிதந்தன. மயானங்களில் எவ்வளவு உடல்கள் எரியூட்டப்பட்டன. இதெல்லாம் அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியாதா…”

இப்படி பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.