கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றவே நாட்டை முடக்கியுள்ளோம்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு.

“மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே நாட்டை முடக்கி வைத்துள்ளோம். நாட்டை முடக்குவது, ஜனாதிபதியினதோ அல்லது என்னுடைய தனித் தீர்மானமோ அல்ல. விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்கத் தீர்மானித்தோம்.”

இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இருக்கும் இலகுவான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும், மரணங்களும் அதிகரித்துள்ளன எனவும் சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக எமக்கு வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது நாட்டை திறப்பது ஆரோக்கியமான விடயமல்ல என்பது எமக்கும் தென்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்கள் பயணத் தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட அதில் முறையாக மக்கள் செயற்படாத நிலையொன்று காணப்பட்டது.

அதன் பின்னரும் ஒரு சில பகுதிகளில் மக்களின் அநாவசியச் செயற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. எனவேதான் 7ஆம் திகதி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை மேலும் ஒரு வாரகாலம் நீட்டிக்கத் தீர்மானித்தோம்.

இந்தத் தீர்மானமானது ஜனாதிபதியின் தனித் தீர்மானமோ அல்லது நான் எடுத்த தனித் தீர்மானமோ அல்ல. நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அமைய, கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

எனவே, ஏற்கனவே 14 நாட்கள் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டாலும் கூட 21 நாட்கள் தொடர்ச்சியாகக் கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே முழுமையான பெறுபேறுகள் வெளிப்படும்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இருக்கும் சரியான வழிமுறை நாட்டை முடக்குவதென்றால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதனால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும். ஆனால், அதனையும் தாண்டி மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயற்படுகின்றோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.