‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை வியாபாரிகளிடமிருந்து வாங்கும் முயற்சியைக் கைவிடுங்கள்!

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாது வியாபாரிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு அரசு எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்ளும்போது போலியான தடுப்பூசிகளைக் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இவ்வாறு தொற்று நோய்கள் குறித்த நிபுணரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னாள் ஆலோசகருமான விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை நினைத்தவுடன் வியாபார சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாது. எவ்வாறெனும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வோம் என கூறும் அரச அதிகாரிகளுக்கு இது விளங்கவில்லை. எங்கிருந்தாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயார் எனப் பேசுகின்ற அதிகாரிகளுக்கு ஒன்றை கூறிவைக்க விரும்புகிறேன்.

வியாபாரிகளிடம் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும்போது அது போலியான தடுப்பூசியாக இருக்கலாம். இதனை சீரம் நிறுவனம் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, அரசு இவ்வாறான முயற்சிகளை எடுக்கக்கூடாது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை முறையாகத் தொடர்புகொண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.