மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா.

பயணத்தடை ஊரடங்கு நிலமை தொடந்தாலும் மக்களின் இயல்பு நிலமைக்கு குந்தகம் இல்லாதவகையில் அரச இயந்திரம் செயல்பட வேண்டும் என்பதுடன் மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் -கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்க வலியுறுத்தல்.

மக்களின் ஆரோக்கியத்தினை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பயணத்தடை ஊரடங்கு நிலமை தொடந்தாலும் மக்களின் இயல்பு நிலமைக்கு குந்தகம் இல்லாதவகையில் அரச இயந்திரம் செயல்பட வேண்டும் என்பதுடன் நாட்டின் பொருளாதார திட்டங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கொறோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொறோனா பரவலை கட்டுப்படுத்தல், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகளின் காரணமாக மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சட்ட விரோத மணல் அகழ்வு போன்ற விடயங்கள் இன்றைய கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

குறிப்பாக, கிளிநொச்சியில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையின் செயற்பாடு தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரணசிங்க, ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதிதாக எவரும் கொறோனா தொற்றுடன் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆடைத் தொழிற்சாலை செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்எனவும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரியின் அபிப்பிராயங்களை கேட்டறிந்த அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பாக அடுத்த வாரமளவில் நிலைமைகளை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அபோன்று, சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றி கொறோனா பரவலை கட்டுப்படுத்துவதுடன், போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில், மணல் அகழவிற்கு வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரங்களில் காணப்படுகின்ற சில தரவுக் குறைபாடுகளும் சட்ட விரோத மணல் அகழ்விற்கு ஏதுவாக அமைவதாக தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், கோரிக்கை முன்வைக்கப்படுமாயின் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தும் பொறிமுறைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

குறித்த கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுதொடர்பான விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து விரிவாக ஆராய்ந்து இறுதி தீர்மானம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற கொறோனா சிகிச்சை நிலையங்களில் சுமார் 2566 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும் 771 தொற்றாளர்கள் மாத்திரமே கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என்று சுகாதார தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.