தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி – ஜி7 நாடுகளின் முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு

தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்ற ஜி7 நாடுகளின் முடிவுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பின் தாக்கம் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படாத எந்த ஒரு நாடும் இல்லை எனும் அளவுக்கு எல்லா நாடுகளும் மிகப்பெரிய இழப்புகளை எதிர்கொண்டன. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்று அறியப்படும் அமெரிக்கா, மற்ற எல்லா நாடுகளையும் விட பெரும் பாதிப்பைகளையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்டுள்ளது. தற்போது, உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என தடுப்பூசி போடும் பணிகளில் தீவிர கவனம் காட்டிவருகின்றன. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு தடுப்பூசிகளைப் போட்டுவருகின்றன. பணக்கார நாடுகள் அனைத்து தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்கின்றன. ஏழை நாடுகள் தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டக்கூடிய நிலையும் இருந்துவருகிறது.

இந்தநிலையில், ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படும் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் ஆகிய நாடுகள் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று முடிவு எடுத்துள்ளனர். இந்தநிலையில், இந்த நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில், காணொலி வாயிலாக சிறப்பு விருந்தினராக இந்திய சுகாதாரத் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஜி7 நாடுகளின் முடிவு கவலை அளிப்பதாகவும், பாரபட்சமானது எனவும் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளை காட்டிலும், வளரும் நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற ஜி7 நாடுகளின் முடிவு. வளரும் நாடுகளின் மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.