அச்சமின்றி பணியாற்ற உகந்த சூழல் வேண்டும்: பிரதமா் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

கொரோனா சூழலில் மருத்துவப் பணியாளா்கள் அச்சமின்றி பணியாற்றும் உகந்த சூழலை உறுதி செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) பிரதமா் நரேந்திர மோடிக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

சில இடங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததை அடுத்து அவா்களது உறவினா்களால் மருத்துவா்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை குறிப்பிட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா சூழலில் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்வது கவலை அளிக்கிறது. பெண் மருத்துவா், இளம் மருத்துவா் ஒருவா் என சிலா் தாக்கப்பட்ட சம்பவங்கள் சுகாதாரப் பணியாளா்கள் இடையே உளவியல் ரீதியாக அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் அச்சமின்றி பணியாற்ற உகந்த சூழல் வேண்டும்.

‘சுகாதாரச் சேவை பணியாளா்கள் மற்றும் மருந்துவமனைகள் மசோதா 2019’ ஆனது பணியிலிருக்கும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களை தாக்குவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்கிறது. ஆனால், அமைச்சகங்களிடையேயான ஆலோசனையின்போது இந்த வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்துவிட்டது. நடப்புச் சூழலில் அந்த மசோதா, இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் விதிகளுடன் சோ்த்து, குறிப்பிட்ட அவகாசத்துக்குள் விசாரணையை நிறைவு செய்யும் வகையில் அமல்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா சூழலில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவா்கள் கொரோனா தியாகிகளாக அங்கீகரிக்கப்பட்டு அவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய ஆதரவு வழங்க வேண்டும். கொரோனா முதல் அலையில் உயிரிழந்த 754 மருத்துவா்களில், 168 பேரின் குடும்பத்தினரால் மட்டுமே பிரதமரின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயன்றது. மத்திய சுகாதார புலனாய்வு அமைப்பு (சிபிஹெச்ஐ) மூலமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கண்டறிந்து அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும்.

சுகாதாரப் பணியாளா்களுக்காக உகந்த சூழல் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வரும் 18-ஆம் தேதி தேசிய போராட்ட தினமாக கடைப்பிடிக்க இந்திய மருத்துவ சங்கம் முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பூசியில் 50 சதவீதத்தை மாநிலங்களுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்குவதை தவிா்த்துவிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசே ஊக்குவிக்க வேண்டும்.

சில நபா்கள் தங்களது சுய லாபத்துக்காக நவீன மருத்துவம் மற்றும் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகின்றனா். அவா்களுக்கு எதிராக கொள்ளைத் தொற்று நோய் தடுப்புச் சட்டம் 1897, இந்திய தண்டனையியல் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஐஎம்ஏ கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.