தமிழரின் இந்தியா குறித்த அணுகுமுறையும் , தொடரும் தவறான பார்வைகளும் : தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

அச்சிதழாகவும் மின்னிதழாகவும் வெளிவருகின்ற பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளும்- அநேகமான தமிழ் மொழிச் சமூக ஊடகங்களும், வலைத்தளங்களும் மட்டுமல்லாமல் தமிழன்பர்களின் முகநூல் பதிவுகளும் கூட இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், ‘இந்தியா இப்படிச் செய்திருக்க வேண்டும்; அப்படிச் செய்திருக்க வேண்டும்’- ‘இப்படிச் செய்திருக்கக் கூடாது; அப்படிச் செய்திருக்க கூடாது’- ‘இப்போது இப்படிச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும்’ என்ற வேண்டுகோள்களுடன் இந்தியாவை விமர்சிப்பதிலும்- குறை கூறுவதிலும்- இந்தியா மீது தவறுகளையும் குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதிலும் காட்டுகின்ற கவனத்தில் கடுகளவைக் கூட இந்தியாவைத் தமிழர் தரப்பு தம் பக்கம் இழுப்பதற்கு என்ன செய்யவேண்டுமென்ற விடயத்தில் காட்டாது மௌனமாகவே இயங்குகின்றன.

இலங்கையில் தமிழில் வெளிவருகின்ற தேசிய நாளிதழ்களிலும் வார வெளியீடுகளிலும் அரசியல் ஆய்வுக் கட்டுரைகளையும் பத்தி எழுத்துக்களையும் எழுதும் ‘புத்திஜீவி’களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்குக் கட்டளையிடும் தோரணையில் கூடக் கருத்துச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்க் கிராமங்களில் ஒரு பழமொழி வாய்மொழி வழக்கிலுண்டு. அது என்னவென்றால், “கொம்மாவுக்குப் புருஷன் வேண்டுமென்றால் கூடையில் வைத்துச் சும” என்பதாகும். அதுதான் ஞாபகத்திற்கு வந்து சிரிப்பை மூட்டியது மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்தது.

இலங்கைத் தமிழர் தரப்பின் மனப்போக்கு எப்படி இருக்கிறதென்றால், ‘நாங்கள் அடிப்போம்- உதைப்போம்- குத்துவோம்- வெட்டுவோம்- (ராஜீவ் காந்தியையும்) கொல்லுவோம். அவற்றையெல்லாம் இந்தியா கண்டுகொள்ளாது பொறுத்துக்கொண்டு இந்தியா எப்போதும் இலங்கைத் தமிழருக்கு நாங்கள் சொல்லுகிற நேரத்தில் நாங்கள் சொல்லுகின்ற படி நடந்து கொள்ள வேண்டும்’ என்பதாகத்தான்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

“ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும்- இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் -இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து சென்று அடைக்கலம் தேடிய தமிழர்களுக்கும் இந்தியா வழங்கிய உதவிகளையும் ஒத்தாசைகளையும்- 1983 யூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்பட்ட இந்தியாவின் நேரடித் தலையீட்டையும்- இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்ட 1987 இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதாவது சரி பிழை மற்றும் விமர்சனங்களுக்கப்பால் இலங்கைத் தமிழர்களின் அதுவரை காலமான அகிம்சைப் போராட்டத்தினதும் தொடர்ந்துவந்த ஆயுதப் போராட்டத்தினதும் அறுவடையாக வந்த அந்த இராஜதந்திர வெற்றியையும்- இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கை மண்ணில் கால் பதித்த இந்திய சமாதானப் படையினரின் வருகையையும்- இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாகக் கொணரப்பெற்ற பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தையும்- அதன் கீழமைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பெற்ற வடகிழக்கு மாகாண அரசையும்” தமிழர் தரப்பு அறிவுபூர்வமாகப் பயன்படுத்தியதா, ஒட்டுமொத்தமாகக் கூறப்போனால் இந்தியா தமிழர்களை நோக்கி நீட்டிய நேசக் கரத்தைத் தமிழர் தரப்பு அறிவுபூர்வமாகப் பற்றிக்கொண்டு பயனடைந்ததா என்பதையிட்டு ஒரு முழுமையான சுய விமர்சனம் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பொது வெளியில் இதுவரை நடைபெற்றுள்ளதா? என்ற வினாவுக்குத் திருப்தியான விடை இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியும் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கும் அவர்கள் ஒவ்வொருத்தரினதும் நோக்கங்களும் இலக்குகளும் வெவ்வேறானதாக இருந்தபோதிலும் எல்லோரும் சேர்ந்துதான் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் முழுமையான அமுலாக்கலைக் குழப்பினார்கள்.

இலங்கைத் தமிழர்களின் நேச சக்தியான இந்தியாவை எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதிலும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதிலும் தெளிவாகவும் உறுதியாகவுமிருந்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான அ.அமிர்தலிங்கம் 1989இல் தமிழர் தரப்பினாலேயே (புலிகளாலேயே) சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டுமல்ல, புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினர் மீது போர் தொடுத்ததன் மற்றும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததன் விளைவையே இன்றும் கூட இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்- உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு” என்னும் குறள் அரசியலுக்கும் பொருந்தும்.

அப்போது (1987) நிலவிய தென்னிலங்கை- இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் தட்பவெப்ப சூழ்நிலையில், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா வலுவான செல்வாக்குப் பெறுவதை விரும்பாத அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரபாகரனைக் கருவியாகக் கொண்டு அதனைக் குழப்பியது.

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அதில் கையெழுத்திட்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கத்தின் கீழ் பிரதமராகப் பதவி வகிக்கும்போதே அதனை ஆரம்பத்தில் எதிர்த்த பின்னாள் ஜனாதிபதி பிரேமதாச தனது அரசியல் நோக்கங்களைப் பிரபாகரனைக் கொண்டு நிறைவேற்றிக் கொண்டார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி புலிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு தமிழகத்தில் ‘தர்பார்’ நடத்தலாம் என்ற நப்பாசையில்- சுயநல நோக்கில் அப்போது புலிகள் சார்ந்த நிலைப்பாட்டை எடுத்தார்.

இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்து அதனை அமுல் செய்வதற்குத் துணிந்து முன் வந்து பாரிய பங்களிப்பை வழங்கிய அப்போதைய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா உட்படப் பதின்மூன்று சக தோழர்களையும் புலிகள் சென்னை, சூளைமேட்டில் வைத்துப் படுகொலை செய்ததில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராகவிருந்த மு.கருணாநிதியின் அரச இயந்திரத்திற்குச் சம்பந்தம் இருந்ததென்பதை அப்போது தமிழகப் பத்திரிகைகள் கூட பகிரங்கமாகச் சந்தேகம் தெரிவித்திருந்தன என்ற தகவலையும் இப்பத்தியில் பதிவுசெய்தல் பொருத்தம்.

அப்போதிருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் பரிச்சயமில்லாத நபராக அவர் விளங்கியதாலும், அதாவது அது பற்றிய அறிவு- விளக்கம் அவரிடம் போதாமை காரணமாகவும், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் கைச்சாத்திடப்பட்டிருந்தபடியாலும் ஏனோதானோவென்று அதில் அக்கறையற்றவராகத் தனது ‘கைத்தடி’யான தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர் விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை முழுமையாக ஒப்படைத்திருந்தார். அந்தப் பொறுப்பைக் கருணாநிதி தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முனைந்ததன் விளைவுகளே அப்போது அவர் புலிகள் சார்பு நிலைப்பாட்டையெடுத்ததும், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் முன்னமே இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறியதுமாகும்.

புலிகள் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பாமல் அனுசரித்துப் போயிருந்தால் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்கமைய இந்திய அமைதிகாக்கும் படையின் பிரசன்னத்தின் போதே உரிய சர்வசன வாக்கெடுப்பும் நடைபெற்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு நிரந்தரமாக்கப்பட்டிருக்கும் நிலையுமேற்பட்டு இன்று அதி குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைந்த ஒற்றை மொழி வாரி மாகாணம் அமுலிலிருந்திருக்கும். இதைக் கெடுத்தது இந்தியாவா? அல்லது தமிழர் தரப்பா? (தமிழீழ விடுதலைப் புலிகளா?) என்பதை, இந்தியாவை விமர்சிக்கும்- குறை கூறும்- குற்றஞ்சாட்டும் தமிழ்ப் ‘புத்திஜீவி’கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

‘இந்தியா தமிழர்களுக்கு உதவும் எண்ணத்துடன் வரவில்லை. தனது புவிசார் அரசியல் நலன்களைத் தக்கவைத்துப் பேணுவதற்காகவே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலையிட்டது’ என்று ஏதோ புதிய விடயமொன்றைக் கண்டுபிடித்தது போல் தமிழர் தரப்புப் ‘புத்திமான்கள்’ அதிமேதாவித்தனமாகப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

உலக நியதியை -இயற்கையின் நியதியை எடுத்துப் பார்ப்போம்.

‘கணவனால் மனைவிக்கு நன்மை; மனைவியால் கணவனுக்கும் நன்மை’- ‘பெற்றோர்களினால் பிள்ளைகளுக்கு நன்மை; பிள்ளைகளினால் பிற்காலத்தில் பெற்றோர்களுக்கு நன்மை’- ‘முதலாளியின் முதலீட்டினால் தொழிலாளர்களுக்கு நன்மை;- தொழிலாளர்களின் உழைப்பினால் முதலாளிக்கு நன்மை’

பரஸ்பரம் நன்மைகளைப் பரிமாறியும்- கொண்டும் கொடுத்தும்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அரசியலும் அப்படித்தான். பரஸ்பரம் நலன்களைப் பேணுவதிலும் பரிமாறிக் கொள்வதிலும் அரசியல் விதிவிலக்கல்ல.

தாவரங்கள் பகலில் நடத்தும் ‘ஒளித்தொகுப்பு’ச் செயற்பாட்டின் போது வெளியிடப்படும் பிராணவாயு (ஒக்சிஜன்) மனிதனின் சுவாசத்திற்கு உதவுகிறது. மனிதனின் சுவாசத்தின் போது வெளியிடப்படும் கரியமில வாயு (காபனீரொட்சைட்டு) தாவரங்கள் ஒளித்தொகுப்பின் மூலம் உணவு தயாரிக்கப் பயன்படுகின்றது. இது இயற்கையின் நியதி.

தெய்வங்களிடம் வரம் வேண்டி வணங்கும் மனிதர்கள் கூடப் பதிலுக்கு ‘நைவேத்தியம்’ படைத்தலும் அபிஷேகம் செய்தலும் புரிகிறார்கள். இது அன்றாட வாழ்வியல் நியதி.

உலக அரசியல் ஒழுங்கு பரஸ்பரம் நாடுகள் தத்தம் நலன்களைப் பரிமாறிக் கொள்வதில்தான் பலம் பெறுகிறது.

இதனைப் புரிந்து கொள்ளாமல், இந்தியாவுக்கு எந்த விதமான நன்மைகளுமில்லாமல் தொப்புள்கொடி உறவினால் மட்டுமே அல்லது தர்மம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டுமென எதிர்பார்ப்பது இயங்கியல் விதிக்கு எதிரானதாகும். இலங்கைத் தமிழர் தரப்பு (தமிழீழ விடுதலைப் புலிகள்) இதனைப் புரிந்து கொண்டு செயற்படாமையே இத்தனை அழிவுகளுக்கும் காரணமாகும்.

அன்று (1987) தனது நலன்களுக்காகப் புலிகளைக் கருவியாகப் பாவித்து இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பிய அமெரிக்காவே பின்னாளில் (2012), 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டுமென்று ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில்-ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருகிறது.

2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னராவது உலக அரசியல் ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள மறுத்து இராணுவ வல்லாண்மையினால் சகலதையும் சாதிக்கலாமென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் போட்ட தப்புக் கணக்குத்தான்- அவரது தன் முனைப்பான செயற்பாடுகள்தான் முள்ளிவாய்க்கால் யுத்தம் வரை தமிழர்களைக் கொண்டு சென்று அப்பாவித் தமிழர்களை அழிவுக்குள்ளாக்கியது.

இப்போதுகூட பூகோள அரசியலின் எதிர்காலவியலைத் தமிழர் தரப்பு புரிந்து கொண்டு செயற்படாமல் சும்மா எடுத்ததற்கெல்லாம் ‘எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்தது’ என்று பழம்பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. ‘எங்களை அடிக்க ஆளில்லை’ என்ற மனப்போக்கு எவ்வளவு காலத்திற்கு நின்று பிடிக்கும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் அதாவது யூ.என்.பி. அரசாங்கங்கள் பதவியிலுள்ள போது தங்கள் வர்க்க நலன்களைப் பரிமாறிக்கொண்டு அமெரிக்காவைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொள்ளும்.

அதேபோல், சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக அதன் வழிவந்த ராஜபக்சாக்கள் பரஸ்பரம் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் சீனாவைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டனர்.

அதேபோல், இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் தலைமை பரஸ்பரம் நன்மைகளுக்காக எப்போதாவது இந்தியாவைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொண்டு செயற்பட்டுள்ளதா? இல்லவே இல்லை.

இதற்கு முரண்பாடாக, இந்தியாவை எதிரியாக்குகின்ற செயற்பாடுகளையே தமிழர் தரப்பு குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1987இல் இருந்து முன்னெடுத்தது. அதற்கு முன்னமே இந்திய மண்ணில் இருந்து கொண்டே – இந்தியாவின் ‘போஷணை’யைப் பெற்று அனுபவித்துக்கொண்டே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்பட்ட காரணத்தினால்த்தான் அதாவது அமெரிக்க நலன்கள் சார்ந்து செயற்பட்ட காரணத்தினால்தான் ஒரு கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை இந்திய அரசாங்கம் நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தது. இப்படித் தமிழர் தரப்பு பல அரசியல் தவறுகளை இழைத்துவிட்டு இப்போது இந்தியா மீது விரலைக் காட்டுவது விவேகமாகாது. புலிகள் விட்ட அதே தவறுகளைத்தான் அதன் பதிலிகளாக- முகவர்களாக- ஆதரவாளர்களாக இன்று இருப்பவர்களும் புரிந்து வருகின்றனர். இதில் தமிழக அரசியல்வாதிகளும் புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் இலங்கையில் இப்போது தமிழ் ஊடகங்களால் தமிழ்த் தேசியக் கட்சிகள் எனக் குறிசுடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் அடங்கும்.

எனவே, சுய விமர்சனங்களின் அடிப்படையில்- பொதுவெளிக் கலந்துரையாடல்களின் அடிப்படையில்- அறிவுபூர்வமான அரசியல் ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் பாரிய மாற்றங்கள் தேவை. இந்த மாற்றங்களை நோக்கி நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் பாணியில் புலிகளை இன்னும் போற்றித் துதி பாடிக் கொண்டும்; ‘இரண்டு தேசம்; ஒரு நாடு’-‘வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்ட்டி’- ‘சர்வதேச போர்க்குற்ற விசாரணை’- ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’- ‘ஐநா மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு’ போன்ற ‘மாயமான்’களை அவிழ்த்துக் கொண்டும் யுத்தத்தால் பேரழிவுக்குள்ளாகிப் போயுள்ள இலங்கைத் தமிழர்களைச் சமூக பொருளாதார ரீதியாகக் கைதூக்கி விடுகின்ற தந்திரோபாயச் செயற்பாட்டு அரசியலை மேற்கொள்ளாமல், கடந்த 70 வருடங்களுக்கும் மேலாகச் செய்துவரும் ‘ஏட்டுச்சுரைக்காய்’ அரசியலையே மேலும் மேலும் தொடருவோமேயானால், சில சுயநலமிகள் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் மாநகரசபை, நகர சபை, பிரதேச சபை போன்ற உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் சென்று ‘பிழைப்பு’ நடத்துவார்களேயொழிய இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் இன்னும் மோசமாகும்.

இந்த ஆபத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கான ஆரம்பப் படியாக இந்தியாவின் காலில் விழுந்தாவது 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் முழுமையாக அமுல் செய்யும்படி செயலாற்றத் தமிழர் தரப்பு துணிய வேண்டும்.

ஏனெனில், தற்போது அமுலிலுள்ள இலங்கை அரசியலமைப்பிலுள்ள ஒரேயொரு அதிகாரப்பகிர்வுப் பொறி முறை (அதில் குறைபாடுகள் இருந்தபோதிலும் கூட) 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின் கீழமைந்த ‘மாகாண சபை முறைமை’யேயாகும். இதனை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுதான் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

கோவணத்தைக் காப்பாற்றிக் கொண்டுதான் பட்டு வேட்டிக்கு ஆசைப்பட வேண்டும். கோவணத்தையும் இழந்துவிட்டால் பட்டு வேட்டி வந்தாலும் பயனில்லை.

இந்த யதார்த்தத்தை அரசியல் தத்துவார்த்த ரீதியாகவும் மக்கள் நலன் சார்ந்து மனப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளும் தமிழ் அரசியல் சக்திகள் தனித்தனியே இயங்காது ஒரு ‘கூட்டுச் சக்தி’யாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இதனை வழி நடாத்துவதற்கு அண்மையில் கொழும்பில் 09.04.2021 அன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ‘அதிகாரப் பகிர்வுக்கான இயக்கம்’ (Movement For Devolution of Power) தகுதி உடைத்தாகும். வடக்கு கிழக்குத் தமிழர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்த கட்சி அரசியல் வேறுபாடுகளை மறந்து இந்த அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

– நன்றி

Leave A Reply

Your email address will not be published.