கொரோனாவால் உயிரிழந்த வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.42,000 சுருட்டிய நர்ஸ்!

பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து 42 ஆயிரம் ரூபாயை தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ஓரு தனியார் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மே 23ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பின்னர் ராஜேஷின் உடலை ஒப்படைக்கும் போது, அவரின் மனைவிடம் மணிபர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜேஷின் மனைவி, தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில், குறைந்த அளவு பணமே அவரின் கணக்கில் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து, வங்கி அதிகாரிகளிடம் அவர் விசாரித்தபோது, ராஜேஷ் உயிர் இழப்பதற்கு முன்பாக, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ரூ.40 ஆயிரம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததும், ஒரு செல்போனுக்கு ரூ.2,500-க்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது.

இந்த பண பரிமாற்றம் மற்றும் அந்த செல்போனுக்கு தனது கணவர் ரீசார்ஜ் செய்திருக்க வாய்ப்பில்லை என கருதிய ராஜேஷின் மனைவி, நடந்த சம்பவங்கள் குறித்து ஒயிட்பீல்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியான ஆன்சி ஸ்டான்லி தான், ராஜேஷ் வங்கி கணக்கில் இருந்து பண பறிமாற்றம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆன்சி ஸ்டான்லியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடந்த மே 22ஆம் தேதி செவிலியர் ஆன்சி ஸ்டான்லியிடம் ராஜேஷிடம் பேசிபோது, தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும்படி கூறியுள்ளார். அவரும் சிறிய தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறார். அந்த சமயத்தில், ராஜேஷின் செல்போன் இருந்து வங்கிக் கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு உள்ளிட்டவற்றை அருகில் இருந்து கவனித்த ஆன்சி ஸ்டான்லி, அந்த தகவலை எழுதி வைத்து கொண்டுள்ளார்.

பின்னர் ராஜேஷ் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது செல்போனை எடுத்து தனது தோழியின் வங்கி கணக்குக்கு ரூ.40 ஆயிரத்தை ஆன்சி ஸ்டான்லி அனுப்பி வைத்துள்ளார். மேலும் தன்னுடைய செல்போனுக்கு ரூ.2,595-க்கு ரீசார்ஜ் செய்துள்ளார். இந்நிலையில், மறுநாளே ராஜேஷ் இறந்து விட்டதால், இதுகுறித்து அவருக்கு எந்த தகவலும் தெரியாமல் இருந்துள்ளது. அதே நேரத்தில் அவரது மனைவி வங்கி கணக்கை சோதித்தபோது செவிலி ஆன்சி ஸ்டான்லி காவல்துறையினரிடம் சிக்கினார்.

Must Read : கட்டுமான பொருட்களின் விலை கடும் உயர்வு… சிமெண்ட், கம்பிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா?

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நர்சுவிடம் இருந்து 42,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ராஜேசின் மனைவியிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். கைதான நர்ஸ் மீது ஒயிட்பீல்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நோயாளியிடம் இருந்து பணத்தை சுருட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.