கல்வி கட்டணம்-நீதிமன்ற உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார்.

கரூர் மாவட்ட மைய நூலகத்தை ஆய்வு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நரிகட்டியூர் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் க.பரமத்தி ஆரம்பப்பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பள்ளிகள், வகுப்பறை, நூலகம், ஆய்வுக்கூடம் மற்றும் மாணவர்கள் அமரும் டேபிள் எப்படி உள்ளது. கழிவறைகள் சுகாதரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆய்வு அறிக்கை முதல்வரிடம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூல் செய்யக் கூடாது என உத்தரவு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் 75 சதவீதம் கல்வி கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்றும். அதையும் 30 சதவீதம் ஒரு தவணையாகவும், 45 சதவீதம் ஒரு தவணையாகவும் வசூல் செய்யலாம் என நீதிமன்றம் வழிகாட்டுதல் செய்து உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தனியார் பள்ளிகள் நடக்க வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

பத்மசேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், மாணவிகள், பொதுமக்கள் அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்பட்டு குற்றச்சாட்டு உண்மை என்ற பட்சத்தில் அது யாராக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும் பள்ளி நிர்வாகமாக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்த அமைச்சர், நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருவதாக, அறிக்கை கிடைத்த பின்பு அதன் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கவே, பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.