கோவையில் மூத்த குடிமக்கள் நடத்தும் ஆன்லைன் ரேடியோ- கதை, பாடல்கள் பாடி அசத்தல்

கோவையில் அமைதியான சூழலில் வாழ்ந்து வரும் வயதான மூத்தகுடிமக்கள் ஒருங்கிணைந்து பாட்டு, கதை, கர்நாக இசை என வித விதமான நிகழ்ச்சிகளை தயாரித்து தபோவானி என்ற ஆன்லைன் ரேடியா நடத்தி வருகின்றனர். இந்த ரேடியோவிற்கு மூத்த குடிமக்கள் ஓவ்வொரு விதமான பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

கோவை மாதம்பட்டி பகுதியில் தபோவானம் என்ற மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகளில் 250-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியிருக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் மூத்த குடிமக்கள் அனைவரும் இணைந்து “தபோவானி” என்ற “ஆன் லைன் ரேடியோவை” நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மூத்த குடிமக்களும் ஆளுக்கொரு பங்களிப்பை இந்த ரேடியோவிற்கு செலுத்தி நடத்தி வருகின்றனர்.

இந்த தபோவானி ஆன்லைன் ரேடியோவிக்கு கதை சொல்வது, கர்நாடக இசை இசைப்பது, கர்நாடக சங்கீதம் பாடுவது, பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்வது என ஓவ்வொருவரும் ஒரு பங்களிப்பை செலுத்துகின்றனர். கதைகளையும், பாடல்களையும், இசை நிகழ்ச்சிகளையும் ஐ போன் அல்லது செல்போனில் பதிவு செய்து அவற்றை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை தபோவானி ஆன்லைன் ரேடியாவிற்காக பதிவு செய்து கொடுப்பதாக அங்கு வசிக்கும் ரமா சம்பத்குமார் என்ற பெண்மணி தெரிவிக்கின்றார். இதிகாச கதைகளை தபோவானி ரேடியோவில் கேட்பதால் வயதானவர்கள் கவலைகளை மறந்து இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சிறு வயதில் கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதத்தை மூத்த குடிமக்களில் ஒருவர் மிருதங்கத்தில் தாளமிட, இன்னொரு மூத்தகுடிமகன் வயலின் வாசிக்க 70 வயதான அன்னபூரணி பாடல்களை பாடுகின்றார். இசையையும், ராகத்தையும் ஒன்று சேர பதிவு செய்து அந்த பாடல்களையும் தபோவானி ஆன்லைன் ரேடியோவில் ஒளிப்பரப்புகின்றனர்.

இங்கு வந்த பின்புதான் பாடல்கள் பாடுகின்றேன் எனவும், இது புது அனுபவமாக இருக்கின்றது எனவும், சிறியவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி மகிழ்ச்சியாக இருங்கின்றோம் என 70 வயதான அன்னபூரணி பாட்டி தெரிவிக்கின்றார்.

தபோவானி ரேடியோவிற்கு நிறைய நிகழ்ச்சிகள், நேரலைகள் எடுத்து இருப்பதாக தெரிவிக்கும் கிரிஜா நந்தகுமார் என்பவர், இது புது அனுபவமாக இருப்பதாகவும் இது போன்ற நிகழ்ச்சிகளை தயார் பண்ணுவதால் எப்போதும் ஜாலியாக இருக்கின்றோம் எனவும் தெரிவிக்கின்றார்.

இங்கு வீட்டில் சமையல் வேலை இல்லை என்பதால் கலாச்சார நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதாகவும் நமக்குள்ளும் இவ்வளவு திறமை இருக்கின்றது என்பதை இப்போது உணர முடிகின்றது எனவும் கிரிஜா நந்தகுமார் தெரிவித்தார்.

50 ஆண்டுகளாக அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த ஸ்ரீதர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த தபோவானி என்ற ஆன்லைன் ரேடியோவை நடத்தி வருகின்றார். வானொலியில் இவருக்கு இருந்த அனுபவத்தை மூத்த குடிமக்களுடன் இணைந்து இதை செயல்படுத்தி வருகின்றார். ஏற்கனவே வீட்டில் பல்வேறு பிரச்சினைகளில் இருக்கும் வயதானவர்கள் சிரிப்பே இல்லாமல் இருந்ததாகவும், அவர்களை ஊக்கப்படுத்தி ஆன்லைன் வானொலி நிகழச்சியில் பங்கேற்க வைத்தாகவும் ஸ்ரீதர் தெரிவிக்கின்றார்.

இது குழந்தைகளை பிரிந்து தனிமையில் இருக்கின்றோம் என்ற மன அழுத்ததில் இருக்கும் மூத்தகுடிமக்களின் மன அழுத்ததினை இது போக்கி இருக்கின்றது எனவும் இப்போது அனைத்து மூத்த குடிமக்களும் தங்கள் பங்களிப்பை வானொலிக்கு கொடுத்து வருவதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார்.

மத்திய அரசு இந்த தபோவானி ஆன்லைன் ரேடியோவிற்கான வரவேற்பை பார்த்து, மேலும் 10 இடங்களில் இதே மாதிரியான ஆன்லைன் ரேடியோ துவங்க ஊக்குவித்து வருகின்றது எனவும் ஓய்வு பெற்ற அதிகாரியான ஸ்ரீதர் தெரிவிக்கின்றார். வாரிசுகளையும், பேரன் பேத்திகளையும் பிரிந்து ஓரு வித ஏக்கத்துடன் அமைதியான சூழலில் வசித்து வரும் மூத்தகுடிமக்களுக்கு இந்த தபோவானி ஆன்லைன் ரேடியோ உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.