பல்கலைக்கழக பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் – நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு, பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம், பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரதி பதிவாளர் பிரதீப் ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, நாட்டில் புதியதொரு சூழ்நிலை உருவாகி வருவதால், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகின்றது.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களும் ஊழியர்களும் தற்போது பல்கலைக்கழக முறைமைக்குள் நுழைந்துள்ளனர்.

அத்தோடு, அனைத்து நிர்வாக ஊழியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் பரீட்சைகளை நடத்துவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நாளாந்தப் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களாவர்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கலந்துரையாடி, உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.