தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்தழிக்க ராஜபக்ச அரசு கங்கணம்! – சிறிதரன்

“தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்கும் வகையிலேதான் ராஜபக்ச அரசு செயற்படுகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் தெரிவித்தார்

கிளிநொச்சி, வலைப்பாட்டுப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் அவ்வாறு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் அஹிம்சை வழியிலும், பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் தமிழர்கள் போராடி வந்தவர்கள்.

தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்வீகமாக வாழ்ந்த இந்த மண்ணிலே எமது உரிமைகளைப் பெறுவதற்காகவே போராடி வந்திருக்கின்றோம்; போராடியும் வருகின்றோம்.

இவ்வாறாக நீண்டகாலமாக இடம் பெற்றுவரும் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க ராஜபக்ச அரசு உத்வேகத்துடன் செயற்படுகின்றது. வடக்கு, கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் வைத்திருக்கும் நோக்குடனேயே இந்த அரசு செயற்படுகின்றது” – என்றார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் வடக்கு மகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பச்சிலைப்பள்ளி, கரைச்சி தவிசாளர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Comments are closed.